அனுமதியின்றி சென்றவிநாயகர் சிலை ஊர்வலம் தடுத்து நிறுத்தம்
தேனியில் அனுமதியின்றி சென்ற விநாயகர் சிலை ஊர்வலத்தை போலீசார் தடுத்து நிறுத்தினர்.
விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி தேனி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சிலைகள் பிரதிஷ்டை செய்து வழிபாடு நடத்தப்பட்டது. இந்நிலையில், சிவசேனா கட்சி சார்பில் தேனி பெரியகுளம் சாலையில் வெற்றிக்கொம்பன் விநாயகர் கோவில் முன்பு இருந்து விநாயகர் சிலை ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. மாநில செயலாளர் குருஅய்யப்பன் தலைமையில் நிர்வாகிகள், ஒரு விநாயகர் சிலையை தலைச்சுமையாக ஊர்வலமாக எடுத்து வந்தனர். அந்த சிலையை அரண்மனைப்புதூர் முல்லைப்பெரியாறு வரை ஊர்வலமாக எடுத்துச் சென்று கரைக்கப் போவதாக கூறினர்.
நேரு சிலை சிக்னல் அருகில் அந்த ஊர்வலம் வந்தபோது, அனுமதியின்றி ஊர்வலம் செல்வதாக கூறி ஊர்வலத்தை போலீசார் தடுத்து நிறுத்தினர். பின்னர் விநாயகர் சிலை மற்றும் சிவசேனா கட்சியினரை ஒரு மினிவேனில் ஏற்றி, அரண்மனைப்புதூர் முல்லைப்பெரியாற்றுக்கு போலீசார் அழைத்துச் சென்றனர். அங்கு போலீஸ் பாதுகாப்புடன் அந்த சிலை ஆற்றில் கரைக்கப்பட்டது. இந்த சம்பவம் சிறிது நேரம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.