தூத்துக்குடி துறைமுகத்துக்கு சென்ற ரெயிலை கவிழ்க்க சதி?

தூத்துக்குடி துறைமுகத்துக்கு சென்ற ரெயிலை கவிழ்க்க சதி நடந்ததா? என ரெயில்வே போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2022-07-10 11:39 GMT

தூத்துக்குடியில் இருந்து வ.உ.சி.துறைமுகம் நோக்கி சரக்கு ரெயில் சென்ற போது, தண்டவாளத்தில் பாறாங்கற்கள் அடுக்கி வைக்கப்பட்டு இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

சரக்கு ரெயில்

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு ரெயில் மூலம் சரக்குகள் கொண்டு செல்லப்பட்டு வருகின்றன. இதற்காக மீளவிட்டான் ரெயில் நிலையத்தில் இருந்து வ.உ.சி. துறைமுகத்துக்கு தனியாக ரெயில் பாதை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த ரெயில் பாதையில் கடந்த மாதம் மது குடித்து விட்டு தூங்கிய 2 பேர் ரெயிலில் அடிபட்டு இறந்தனர். தொடர்ந்து ரெயில்கள் சரக்குகளை ஏற்றி சென்று வந்தன. நேற்று முன்தினம் மாலையில் தூத்துக்குடி மீளவிட்டான் ரெயில் நிலையத்தில் இருந்து வ.உ.சி. துறைமுகம் நோக்கி ஒரு சரக்கு ரெயில் சென்று கொண்டு இருந்தது. இந்த ரெயில் தூத்துக்குடி 3-வது மைல் பாலம் அருகே சென்ற போது, தண்டவாளத்தின் நடுவில் 5 பாறாங்கற்கள் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தன. இதனை பார்த்த ரெயில் என்ஜின் டிரைவர் சுதாரித்துக் கொண்டு ரெயிலை நிறுத்தினார். இதனால் அசம்பாவிதம் தடுக்கப்பட்டது. தொடர்ந்து அவர்கள் தண்டவாளத்தில் இருந்த 5 கற்களையும் அகற்றி விட்டு வ.உ.சி. துறைமுகத்துக்கு புறப்பட்டு சென்றனர்.

ஆய்வு

இது தொடர்பாக ரெயில் என்ஜின் டிரைவர் ரெயில்வே நிர்வாகத்துக்கு புகார் அளித்தார். அதன்பேரில் ரெயில்வே அதிகாரிகள் ரெயில்வே பாதுகாப்பு படையினரிடம் புகார் கொடுத்தார். இதனை தொடர்ந்து ரெயில்வே பாதுகாப்பு படை கோட்ட பாதுகாப்பு ஆணையர் அன்பரசு, தூத்துக்குடி ரெயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் கண்ணன், ரெயில்வே பாதுகாப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் மகாகிருஷ்ணன் மற்றும் போலீசார் 3-வது மைல் பகுதியில் பாறாங்கற்கள் வைக்கப்பட்ட பகுதியில் ஆய்வு செய்தனர். தண்டவாளத்தில் இருந்து அகற்றப்பட்ட கற்களையும் பார்வையிட்டனர். பின்னர் மோப்பநாய் ரோவர் வரவழைக்கப்பட்டது. அந்த கற்களை வைத்தவர்களை கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. ஆனால் மோப்பநாய் யாரையும் பிடிக்கவில்லை. இது தொடர்பாக ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விழிப்புணர்வு

தொடர்ந்து திரு.வி.கநகர் பகுதியில் பொதுமக்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் மாநகராட்சி 51-வது வார்டு கவுன்சிலர் மந்திரமூர்த்தி, வளர்பிறை இளைஞர் நலச்சங்கம் தாமோதரன் மற்றும் ரெயில்வே போலீசார் கலந்து கொண்டு ரெயில்வே பாதுகாப்பு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பின்னர் ரெயில்வே பாதுகாப்பு படை கோட்ட பாதுகாப்பு ஆணையர் அன்பரசு நிருபர்களிடம் கூறும் போது, ரெயில்வே பொதுமக்களின் சொத்து. இதனை சேதப்படுத்துவது தவறான செயல் ஆகும். சேதப்படுத்துபவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று கூறினார்.

தூத்துக்குடியில் ரெயில் தண்டவாளத்தில் பாறாங்கற்களை வைத்து ரெயிலை கவிழ்க்க சதி செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்