கணவருடன் மோட்டார்சைக்கிளில் சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு
உப்புக்கோட்டை அருகே கணவருடன் மோட்டார்சைக்கிளில் சென்ற பெண்ணிடம் நகையை பறித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்;
வீரபாண்டி அருகே உள்ள தர்மாபுரி பசும்பொன் நகரை சேர்ந்தவர் ஈஸ்வரன் (வயது 37) விவசாயி இவரது மனைவி தேவி. நேற்று இரவு இவர்கள் 2 பேரும் தேனியில் இருந்து மோட்டார்சைக்கிளில் தர்மாபுரிக்கு சென்று கொண்டிருந்தனர். மோட்டார்சைக்கிளை ஈஸ்வரன் ஓட்டினார். தேவி பின்னால் அமர்ந்திருந்தார்.
தேனி-கம்பம் சாலையில் வீரபாண்டி அருகே வந்தபோது அவர்களை பின்தொடர்ந்து மோட்டார்சைக்கிளில் 3 பேர் வந்தனர். ஒருகட்டத்தில் மர்மநபர்கள் தேவி கழுத்தில் அணிந்திருந்த 2¾ பவுன் நகையை பறித்து கொண்டு மின்னல் வேகத்தில் தப்பி சென்றுவிட்டனர். இதுகுறித்து ஈஸ்வரன் வீரபாண்டி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகையை பறித்து சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.