தர்மபுரி அன்னசாகரத்தில் நகர்ப்புற நலவாழ்வு மையம்; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்

Update: 2023-06-07 19:30 GMT

தர்மபுரி அன்னசாகரத்தில் நகர்ப்புற நலவாழ்வு மையத்தை காணொலி காட்சி மூலம் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

நகர்ப்புற நல வாழ்வு மையங்கள்

தமிழ்நாடு அரசு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் மாநிலம் முழுவதும் 500 நகர்ப்புற நல வாழ்வு மையங்கள் திறப்பு விழா நேற்று மாலை நடைபெற்றது. சென்னையில் நடைபெற்ற இந்த விழாவில் தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு நகர்ப்புற நல வாழ்வு மையங்களை திறந்து வைத்து பேசினார். இதனைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் நகா்ப்புற நலவாழ்வு மையங்கள் பயன்பாட்டுக்கு வந்தது.

இந்த திட்டத்தின் கீழ் தர்மபுரி அன்னசாகரத்தில் நகர்ப்புற நல வாழ்வு மையம் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. விழாவிற்கு கலெக்டர் சாந்தி தலைமை தாங்கினார். வெங்கடேஸ்வரன் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ. தடங்கம் சுப்பிரமணி, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் யசோதா மதிவாணன், நகராட்சி தலைவர் லட்சுமி நாட்டான் மாது ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மருத்துவ பரிசோதனை

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நகர்ப்புற நல வாழ்வு மையத்தை திறந்து வைத்தவுடன் டாக்டர்கள் பொதுமக்களுக்கு மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்டனர். இந்த பணியை கலெக்டர் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பார்வையிட்டனர். நகர பகுதியில் அமைக்கப்பட்டுள்ள இந்த நலவாழ்வு மையத்தை பொதுமக்கள் நல்ல முறையில் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று கலெக்டர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் மருத்துவ பணிகள் இணை இயக்குனர் சாந்தி, சுகாதார பணிகள் துணை இயக்குனர் நந்தினி, அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் அமுதவல்லி, நகராட்சி ஆணையாளர் புவனேஸ்வரன், நகராட்சி துணைத் தலைவர் நித்யா அன்பழகன், நகராட்சி கவுன்சிலர் ராஜாத்தி ரவி மற்றும் அரசு அலுவலர்கள், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்