ரூ.23¾ லட்சத்தில் நலத்திட்ட உதவி

தெள்ளை மலை கிராமத்தில் நடந்த மனுநீதி முகாமில் ரூ.23¾ லட்சம் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை கலெக்டர் குமாரவேல் பாண்டியன், நந்தகுமார் எம்.எல்.ஏ. ஆகியோர் வழங்கினர்.

Update: 2023-07-19 17:56 GMT

நலத்திட்ட உதவிகள்

வேலூர்மாவட்டம், கணியம்பாடி அடுத்த துத்திக்காடு ஊராட்சிக்கு உட்பட்ட தெள்ளை மலை கிராமத்தில் சிறப்பு மனு நீதி நாள் முகாம் நேற்று நடந்தது. கணியம்பாடி ஒன்றியக் குழு துணைத் தலைவர் கஜேந்திரன் தலைமை தாங்கினார். சப்-கலெக்டர் கவிதா, தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) தனஞ்செயன், தாசில்தார் செந்தில், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜன்பாபு, கவுரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி மன்ற தலைவர் பாபு வரவேற்றார்.

முகாமில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட கலெக்டர் குமாரவேல்பாண்டியன், அணைக்கட்டு எம்.எல்.ஏ. நந்தகுமார் ஆகியோர் கலந்து கொண்டு, ரூ.23 லட்சத்து 77 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

முகாமில் மொத்தம் 266 மனுக்கள் பெறப்பட்டன. இதில் 135 மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. 73 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. மீதமுள்ள 58 மனுக்கள் பரிசீலனையில் வைக்கப்பட்டுள்ளது.

கூட்டத்தில் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் கூறியதாவது:-

தார்சாலை

மனுநீதி நாள் முகாம் மற்றும் சம்பந்தப்பட்ட அலுவலகங்களில் மக்கள் வழங்கும் கோரிக்கைகளை பரிசீலித்து அவற்றின் மீது உரிய நடவடிக்கைகளை அலுவலர்கள் எடுக்க வேண்டும். இந்த பணிகளை நம்முடைய கடமையாக எண்ணி செய்ய வேண்டும். தள்ளுபடி செய்யப்பட்ட மனுக்களை தள்ளுபடி செய்ததோடு நின்று விடாமல் அந்த மனுதாரர்களுக்கு அவர் எதிர்பார்க்கும் அரசின் நலத்திட்டம் கிடைக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

மாவட்டத்தில் சாலை வசதி இல்லாத மலை கிராமங்களுக்கு தரமான தார் சாலைகள் அமைக்க மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சுகாதாரப் பணியாளர்கள் ஒவ்வொரு பொது மக்களையும் சந்தித்து அவர்களுக்கு பரிசோதனைகளை செய்து தேவையான மருத்துவ உதவிகளை அவர்களின் இல்லங்களுக்கே சென்று வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

நடவடிக்கை

கலெக்டர் பேசிக்கொண்டிருந்த போது, பெண்கள் சிலர் எழுந்து குடிநீர், சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள்கூட சரியில்லை. புகார் கூறியும் அதிகாரிகள் சரி செய்யவதில்லை என தெரிவித்தனர்.

அப்போது கோபமடைந்த கலெக்டர் குமாரவேல் பாண்டியன், கிராமப்புறங்களில் மக்களுக்கு நன்மை செய்யவும், திட்டங்களை கொண்டு சேர்க்கவும் அதிகாரிகள் தான் அந்த பணியை செய்ய வேண்டும். ஆனால் நீங்கள் சரியாக வேலை செய்வது கிடையாது. இனியும் இது போன்று புகார்கள் வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என பேசினார். இதனால் முகாமில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்