138 பயனாளிகளுக்கு ரூ.82½ லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள்
வாலாஜாவில் நடந்த ஜமாபந்தி நிறைவு விழாவில் 138 பயனாளிகளுக்கு ரூ.82½ லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் ஆர்.காந்தி வழங்கினார்.
நலத்திட்ட உதவி
வாலாஜா தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி நிறைவு விழா நடந்தது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கினார். கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்து கொண்டு, 138 பயனாளிகளுக்கு ரூ.82 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
உடனுக்குடன் நிறைவேற்றம்
முன்பெல்லாம் ஜமாபந்தி நிகழ்ச்சி நடைபெறும் போது அதிகமான பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை வழங்கினார்கள். அந்த நிலைமை தற்பொழுது மாறியுள்ளது. காரணம் தமிழ்நாடு முதல்-அமைச்சர் தலைமையிலான மக்களாட்சியில் கடந்த ஈராண்டுகளில் மக்களின் நியாயமான கோரிக்கைகள் உடனுக்குடன் நிறைவேற்றப்படுகிறது. மக்களின் வரிப்பணத்தினை வீணடிக்காமல் மக்களுக்கான பயனுள்ள திட்டங்களை சிந்தித்து செயல்படுத்தி வருகிறார்.
அதனால் அனைத்து தரப்பு மக்களும் பயனடைந்து வருகின்றார்கள். உங்களின் கோரிக்கை மனு நியாயமானதாகவும், உண்மைத்தன்மையுடனும் இருக்கும் பட்சத்தில் உங்களுடைய கோரிக்கை உடனடியாக நிறைவேற்றப்படும். அதற்கு யாருடைய தயவும் தேவையில்லை.
மக்களைத் தேடி...
வாலாஜா வட்டத்தில் ஒரு வாரம் நடைபெற்ற ஜமாபந்தி நிகழ்ச்சி மூலம் 205 மனுக்கள் வரபெற்றது. இதில் 138 மனுக்கள் விசாரனையின் அடிப்படையில் ஏற்கப்பட்டது. 38 மனுக்கள் பரிசீலனைக்காக நிலுவையில் வைக்கப்பப்பட்டுள்ளது. 29 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது.
அரசைத் தேடி மக்கள் சென்ற நிலைமை மாறி, தற்பொழுது மக்களைத் தேடிவந்து குறைகளை கேட்டறிந்து அவர்களுக்கான நலத்திட்டங்களை அரசு வழங்கி வருகிறது. மேலும் மக்களின் அடிப்படை பிரச்சினைகள் உடனுக்குடன் நிறைவேற்றித் தரப்படுகிறது. ஆதலால் மக்கள் தங்களுக்கு யார் ஆட்சிக்கு வந்தால் நல்லது செய்வார்கள் என சிந்தித்து செயல்பட்டு உங்களுக்கான நல்ல தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டும். அப்பொழுது தான் நீங்கள் செலுத்தும் வரிப்பணம் வீணாகாமல் நல்ல திட்டங்கள் மூலம் உங்களையே வந்தடையும்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் உதவி ஆணையர் (கலால்) சத்தியபிரசாத், வருவாய் கோட்டாட்சியர் வினோத்குமார், நகர மன்ற தலைவர் சுஜாதா வினோத், தாசில்தார்கள் நடராஜன், ரேவதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.