ரூ.11 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள்
போளூரில் ஜமாபந்தி நிறைவு விழாவில் ரூ.11 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை எம்.எல்.ஏ.க்கள் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, சரவணன் வழங்கினர்
போளூர்
போளூர் தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி நிறைவு விழா மற்றும் விவசாயிகள் மாநாடு கலெக்டரின் நேர்முக உதவியாளர் கணேஷ் தலைமையில் நடைபெற்றது. தாசில்தார் சண்முகம் வரவேற்றார்.
இதில் எம்.எல்.ஏ.க்கள் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, சரவணன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு 35 பயனாளிகளுக்கு ரூ.11 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.
மேலும் ஜமாபந்தியில் 787 மனுக்கள் பெறப்பட்டு 171 மனுக்கள் தீர்வு காணப்பட்டது. 48 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. 568 மனுக்கள் பரிசீலனையில் உள்ளது.
அக்ரி கிருஷ்ணமூர்த்தி எம்.எல்.ஏ. பேசுகையில், போளூர் பேரூராட்சியில் அடிப்படை வசதிகளை மேற்கொள்ள ரு.25 லட்சமும், அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கூடுதல் கட்டிடம் கட்ட ரூ.25 லட்சமும், சாலையின் நடுவே மின் விளக்குகள் அமைக்க ரூ.80 லட்சமும் சட்டமன்ற உறுப்பினர் நிதியில் ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.
மேலும் 42 கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் கழிப்பிடம் கட்ட சட்டமன்ற உறுப்பினர் நிதி ஒதுக்கப்படும் என்றார்.
சரவணன் எம்.எல்.ஏ. பேசுகையில், செய்யாற்றின் குறுக்கே கரைப்பூண்டி அருகே தடுப்பணை கட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்படும். சதுப்பேரிக்கு சாலை வசதி செய்து தரப்படும் என்றார். .
நிகழ்ச்சியில் போளூர் ஒன்றியக்குழு தலைவர் சாந்தி பெருமாள், சேத்துப்பட்டு ஒன்றியக்குழு தலைவர் ராணி அர்ஜுனன், போளூர் பேரூராட்சி தலைவர் ராணி சண்முகம், முன்னாள் ஒன்றிய குழு தலைவர்கள் செல்வன், சுப்பிரமணியன், மற்றும் தனி தாசில்தார் வெங்கடேசன், துணை தாசில்தார்கள் சரவணன், அருள், தட்சிணாமூர்த்தி, கோமதி, வட்டவழங்கல் அலுவலர் தேவி உள்ளிட்ட வருவாய்த்துறை அலுவலர்கள், விவசாய சங்க பிரதிநிதிகள் உள்ளிட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
முடிவில் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் செந்தில்குமார் நன்றி கூறினார்.