தூத்துக்குடியில் ஜமாபந்தியில் மனு அளித்த 98 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் கலெக்டர் செந்தில்ராஜ் வழங்கினார்

தூத்துக்குடியில் ஜமாபந்தியில் மனு அளித்த 98 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் வழங்கினார்

Update: 2022-06-01 16:50 GMT

தூத்துக்குடி:

தூத்துக்குடியில் ஜமாபந்தியில் மனு அளித்த 98 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் வழங்கினார்.

ஜமாபந்தி

தூத்துக்குடி தாலுகாவில் உள்ள கிராமங்களுக்கான வருவாய் தீர்வாய கணக்கு முடிப்பு பணி (ஜமாபந்தி) கடந்த 25-ந் தேதி தொடங்கியது. தூத்துக்குடி தாலுகா ஜமாபந்தி அலுவலரான மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமையில் கிராமங்கள் வாரியாக கணக்குகள் சரிபார்க்கப்பட்டன. பொதுமக்களிடம் இருந்தும் மனுக்களை வாங்கினார். இந்த ஜமாபந்தி நேற்றுடன் முடிவடைந்தது. நேற்று சங்கரப்பேரி, புலிப்பாஞ்சான்குளம், மாப்பிள்ளையூரணி, தூத்துக்குடி பகுதி 1 மற்றும் 2 ஆகிய கிராமங்களை சேர்ந்த பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் பெறப்பட்டன.

மேலும் பெறப்பட்ட மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன. அதன்படி நேற்று 8 பேருக்கு விதவை உதவித்தொகை, 19 பேருக்கு இலவச வீட்டுமனைப்பட்டா, 2 பேருக்கு தெளிப்பான் கருவி, 14 பேருக்கு தலா ரூ.50 ஆயிரம் கொரோனா நிவாரணத் தொகை, 3 பேருக்கு தையல் எந்திரம், 50 பேருக்கு பட்டா ஆகியவற்றை மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் வழங்கினார்.

மனுக்கள்

பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, தூத்துக்குடி தாலுகாவில் 1156 மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம், எட்டயபுரம், கயத்தாறு ஆகிய தாலுகாக்களில் வருகிற 7-ந் தேதி வரை ஜமாபந்தி நடக்கிறது. தூத்துக்குடி, கோவில்பட்டி, திருச்செந்தூர் தாலுகாக்களில் ஜமாபந்தி முடிவடைந்து உள்ளது. ஜமாபந்தியில் பெறப்பட்ட மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்படும், என்று கூறினார்.

நிகழ்ச்சியில் தூத்துக்குடி தாசில்தார் செல்வக்குமார், சிவில் சப்ளை தாசில்தார் ஜஸ்டின், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்