80 ஆயிரத்து 555 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்குகிறார்

கரூரில் 80 ஆயிரத்து 555 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை இன்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்குகிறார்.

Update: 2022-07-01 19:34 GMT

முதல்-அமைச்சர் கரூர் வருகை

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாவட்டம் வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார். அந்தவகையில் முதல்-அமைச்சராக பதவியேற்ற பின் அவர் முதன்முறையாக கரூர் மாவட்டத்திற்கு வருகை தந்து, கரூர் மாவட்டத்தில் புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கி வைத்தும், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்குகிறார்.

வரவேற்பு

இதற்கான விழா கரூர் திருமாநிலையூரில் உள்ள மைதானத்தில் இன்று (சனிக்கிழமை) காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது. இதற்காக விழா மேடை மற்றும் அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் முக்கிய பிரமுகர்கள் மற்றும் பயனாளிகள் அமரும் வகையில் இருக்கைகள் போடப்பட்டுள்ளது. இதனையொட்டி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று மாலை 5.20 மணியளவில் சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்தார். அவருக்கு கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். திருச்சி விமானநிலையத்தில் இருந்து மாலை 5.35 மணிக்கு அவர் கார் மூலம் கரூர் மாவட்டத்திற்கு வருகை புரிந்தார்.

அப்போது மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சரும், மாவட்ட பொறுப்பாளருமான வி.செந்தில்பாலாஜி தலைமையில் குளித்தலை, கிருஷ்ணராயபுரம், மாயனூர், வெங்கக்கல்பட்டி ஆகிய 4 இடங்களில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து கரூரில் உள்ள பயணியர் மாளிகையில் தொழில் முனைவோர், வர்த்தகர்களை சந்தித்து கோரிக்கை மனுக்களை பெற்றார். நேற்றிரவு பயணியர் மாளிகையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தங்கினார்.

80,555 பேருக்கு நலத்திட்ட உதவிகள்

இந்நிலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (சனிக்கிழமை) காலை 9 மணியளவில் கரூர் பயணியர் மாளிகையில் இருந்து அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெறும் திருமாநிலையூர் மைதானத்திற்கு வருகை தருகிறார். அப்போது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் வழியில் 23 இடங்களில் 1 லட்சத்து 10 ஆயிரம் பேர் வழிநெடுகிலும் நின்று பிரம்மாண்ட வரவேற்பு அளிக்க உள்ளனர்.பின்னர் விழா மேடையில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேருரையாற்றுகிறார். இதில் 80 ஆயிரத்து 555 பயனாளிகளுக்கு அவர் நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார். மேலும் கரூர் மாவட்டத்தில் புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கி வைக்கவும் உள்ளார். விழா முடிந்ததும் கார் மூலம் அவர் நாமக்கல் மாவட்டத்திற்கு செல்கிறார். அங்கு நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாட்டில் பங்கேற்கிறார்.

எல்.இ.டி. திரைகள்

கரூரில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கும் விழா மேடையில் நடைபெறும் நிகழ்வினை பொதுமக்கள் அனைவரும் பார்த்திடும் வகையில் எல்.இ.டி. திரைகள் பந்தலில் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ளது. மேலும் அடிப்படை வசதிகளான குடிநீர் வசதி, கழிப்பிட வசதி உள்ளிட்டவை ஏற்படுத்தப்பட்டுள்ளன. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் விழாவுக்கு தனி பாதையும், முதல்-அமைச்சரின் வாகனம் வருவதற்கு தனியாகவும் பாதைகள் அமைக்கப்பட்டுள்ளது. மின்விளக்குகளால் விழா பந்தல் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்