மக்கள் குறைகேட்பு கூட்டத்தில் 66 பேருக்கு நலத்திட்ட உதவிகள்

விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைகேட்பு கூட்டத்தில் 66 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

Update: 2023-05-22 18:45 GMT

விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று வாராந்திர மக்கள் குறைகேட்பு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் சி.பழனி தலைமை தாங்கி பொதுமக்கள், மாற்றுத்திறனாளிகளிடம் குறைகளை கேட்டறிந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். முதியோர் உதவித்தொகை, வீட்டுமனைப்பட்டா, ஆதரவற்றோர் உதவித்தொகை, பட்டா மாற்றுதல், தொழில் தொடங்க கடனுதவி, பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்டம், முதல்-அமைச்சரின் பசுமை வீடு திட்டம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 402 பேர் மனுக்களை கொடுத்தனர். இம்மனுக்களை பெற்ற மாவட்ட கலெக்டர் சி.பழனி, இம்மனுக்கள் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கும்படி சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். தொடர்ந்து, மரக்காணம் ஒன்றியம் வடநெற்குணம் ஊராட்சியை சேர்ந்த 4 பேருக்கு அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் தலா ரூ.2.10 லட்சம் மதிப்பில் வீடு கட்டுவதற்கான ஆணையையும், தாட்கோ மூலம் ஆதிதிராவிட சிறு, குறு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் 41 பேருக்கு ரூ.6.15 லட்சம் மதிப்பில் பைப்லைன் வாங்குவதற்கு மானியமும், 21 பேருக்கு ரூ.2.10 லட்சம் மதிப்பில் மின் மோட்டார் வாங்குவதற்கு மானியமும் என 66 பேருக்கு ரூ.16 லட்சத்து 65 ஆயிரம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் (நிலஎடுப்பு) சரஸ்வதி, சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் விஸ்வநாதன், கலெக்டரின் கூடுதல் நேர்முக உதவியாளர் (நிலம்) சிவா, தாட்கோ மேலாளர் மணிமேகலை உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்