1,083 பேருக்கு நலத்திட்ட உதவிகள்

காட்டுமன்னார்கோவில் அருகே நடந்த மனுநீதி நாள் முகாமில் 1,083 பேருக்கு அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

Update: 2022-06-29 16:15 GMT

காட்டுமன்னார்கோவில், 

காட்டுமன்னார்கோவில் அருகே முட்டம் கிராமத்தில் வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் மனு நீதி நாள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. முகாமிற்கு கடலூர் மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் தலைமை தாங்கினார். சமூக பாதுகாப்பு திட்ட தனித்துனை கலெக்டர் உதயகுமார் வரவேற்று பேசினார். கடலூர் கூடுதல் கலெக்டர் பவன் குமார் கிரியப்பனவர், மாவட்ட வருவாய் அலுவலர் கிருஷ்ணன், சிதம்பரம் கோட்டாட்சியர் ரவி, ஊராட்சி மன்ற தலைவர் எம்.ஆர்.தெய்வசிகாமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளராக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு அனைத்து துறைகள் சார்பில் 1,083 பேருக்கு 4 கோடியே 76 லட்சத்து 55 ஆயிரத்து 683 ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசினார்.

விவசாய புரட்சி

அப்போது அவர் பேசியதாவது:- விவசாயிகளின் வளர்ச்சியே கிராம வளர்ச்சி ஆகும். விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு மதிப்பு கூட்டுவரியின் மூலம் விற்பனை செய்தால் நல்ல லாபம் பெற முடியும். இதனால் நாங்கள் மார்க்கெட்டிங் பிரிவை ஆய்வு செய்து செம்மைப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

கடந்த 10 ஆண்டு காலத்தில் தனியார் வியாபாரிகளால் விவசாயிகள் பல்வேறு இடங்களில் வஞ்சிக்கப்பட்டு வந்தனர். ஆனால் தற்போது மார்க்கெட்டிங் முறையில் விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்த பொருட்களை நல்ல லாபத்தில் விற்பனை செய்து வருகின்றனர். விவசாய புரட்சி செய்ய தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இப்போது விவசாய சங்கங்கள் போராட்டம் செய்வதற்கு எந்த விதமான முகாந்திரமும் இல்லை. ஆதலால் விவசாய சங்கங்கள் போராட்டமே செய்ய முன்வரவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

435 மனுக்கள்

முன்னதாக முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மொத்தம் 435 மனுக்களை அளித்தனர். இதில் 250 மனுக்கள் ஏற்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 62 மனுக்கள் பரிசீலனையில் உள்ளது. 123 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. இதில் சமூக நல தாசில்தார் தமிழ்செல்வன் மற்றும் அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் தாசில்தார் வேணி நன்றி கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்