பயனாளிகளுக்கு ரூ.5½லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்

ஆலங்குடியில் பயனாளிகளுக்கு ரூ.5½லட்சத்தில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் வழங்கினார்.

Update: 2022-09-07 14:06 GMT

வலங்கைமான்:

ஆலங்குடியில் பயனாளிகளுக்கு ரூ.5 லட்சத்தில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் வழங்கினார்.

திறப்பு விழா

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வட்டத்திற்குட்பட்ட ஆலங்குடி ஊராட்சியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ், மகளிர் வாழ்வாதார சேவை மையம் கட்டப்பட்டது. இதன் திறப்பு விழா நடந்தது. விழாவில் மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் கலந்து கொண்டு மையத்தை திறந்து வைத்தார். பூண்டி.கே.கலைவாணன் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார்.

பின்னர் கலெக்டர் கூறியதாவது:-

வாழ்ந்து காட்டுவோம் திட்டம் மன்னார்குடி வட்டாரத்தில் 51 கிராம ஊராட்சிகளிலும், வலங்கைமான் வட்டாரத்தில் 50 கிராம ஊராட்சிகளிலும், நீடாமங்கலம் வட்டாரத்தில் 44 கிராம ஊராட்சிகளிலும், முத்துப்பேட்டை வட்டாரத்தில் 29 கிராம ஊராட்சிகளிலும் என மொத்தம் 174 கிராம ஊராட்சிகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

தொழில்முனைவோர்

இந்த திட்டத்தில் பெண்கள், ஆதிதிராவிடர், பழங்குடியினர், மாற்றுத்திறனாளிகள், இளைஞர்கள் மற்றும் ஆர்வமுள்ள தொழில் முனைவோர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

ஊரக பகுதிகளில் தொழில் முனைவுகளை உருவாக்குதல், நிதி சேவைகளுக்கு வழிவகை செய்தல் மற்றும் வேலைவாய்ப்புகளை உருவாக்குதல் ஆகியவற்றை நோக்கமாக கொண்டு செயல்படுத்தப்படுகிறது.இவ்வாறு அவர் கூறினார்.

நலத்திட்ட உதவிகள்

அதனை தொடர்ந்து 11 மகளிர் குழுக்களை சேர்ந்த தொழில் முனைவோர்களுக்கு ரூ.4 லட்சத்து 5 ஆயிரம் கடன் உதவிகளும், 2 மகளிர் சுய உதவி குழுவிற்கு ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் தொழில் முதலீட்டு கடன் உதவியும், 10 தொழில் முனைவோர்களுக்கு சிறு, குறு தொழில் தொடங்குவதற்கான அங்கீகார சான்றிதழ் என மொத்தம் ரூ.5 லட்சத்து 55 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் வழங்கினார்.

இதில் திருவாரூர் உதவி கலெக்டர் சங்கீதா, நீடாமங்கலம் ஒன்றிய குழுத்தலைவர், சோம.செந்தமிழ்செல்வன், வாழ்ந்து காட்டுவோம் திட்டம் செயல் அலுவலர் செல்வம், வலங்கைமான் தாசில்தார் சந்தானம், ஒன்றிய ஆணையர்கள் கலைராஜன், பொற்செல்வி மற்றும் அரசு அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்