135 பயனாளிகளுக்கு ரூ.19¾ லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்
நாகையில் நடந்த சிறப்பு மக்கள் நேர்காணல் முகாமில் 135 பயனாளிகளுக்கு ரூ.19 லட்சத்து 88 ஆயிரத்து 318 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் வழங்கினார்.
நாகையில் நடந்த சிறப்பு மக்கள் நேர்காணல் முகாமில் 135 பயனாளிகளுக்கு ரூ.19 லட்சத்து 88 ஆயிரத்து 318 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் வழங்கினார்.
மக்கள் நேர்காணல் முகாம்
நாகை கலெக்டர் அலுவலக வளாகத்தில் சிறப்பு மக்கள் நேர்காணல் முகாம் நடைபெற்றது. முகாமுக்கு மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தலைமை தாங்கினார். தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கவுதமன், முகமது ஷாநவாஸ் எம்.எல்.ஏ., மாவட்ட வருவாய் அலுவலர் சகிலா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.முகாமில் கலெக்டர் கூறியதாவது:-
தமிழ்நாடு அரசு அறிவிக்கும் எண்ணற்ற திட்டங்கள் சரியான நபர்களுக்கு சரியான நேரத்தில் சென்றடைய வேண்டும். அப்படி சென்றடைந்தால் அத்திட்டம் வெற்றிபெற்றது என அர்த்தம். உண்மையான கஷ்டத்தில் இருக்கக்கூடிய மக்களுக்கு உதவும் வகையில் மாவட்ட நிர்வாகம் முனைப்புடன் செயல்படும்.
இலவச வீட்டுமனை பட்டா
தமிழ்நாடு அரசானது பல்வேறு திட்டங்களை பொதுமக்கள் பயன்பெறும் வகையில் செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் சிறப்பு மக்கள் நேர்காணல் முகாம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த முகாமில் வருவாய் துறை சார்பில் 67 பயனாளிகளுக்கு ரூ.16 லட்சத்து 75 ஆயிரம் மதிப்பில் இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது.
மேலும் சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 21 பயனாளிகளுக்கு மாதம் ரூ.2 லட்சத்து 94 ஆயிரம் மதிப்பில் முதல்-அமைச்சரின் உழவர் பாதுகாப்பு திட்ட முதியோர் உதவித்தொகை, கணவரால் கைவிடப்பட்டோர் உதவிதொகை, விதவை உதவித்தொகை, மாற்றுத்திறனாளி உதவித்தொகையும் வழங்கப்பட்டது.
பண்ணைக் கருவிகள்
தோட்டக்கலைத்துறை சார்பில் 3 பயனாளிகளுக்கு ரூ.7 ஆயிரத்து 520 மதிப்பில் மரக்கன்றுகளையும், வேளாண்மைத்துறை சார்பில் 10 பயனாளிகளுக்கு ரூ.11 ஆயிரத்து 798 மதிப்பில் பண்ணைக் கருவிகள் போன்ற நலத்திட்ட உதவிகளையும், மாவட்ட வழங்கல் துறை சார்பில் 34 பயனாளிகளுக்கு புதிய குடும்ப அட்டை என மொத்தம் 135 பயனாளிகளுக்கு ரூ.19 லட்சத்து 88 ஆயிரத்து 318 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது என்றார்.
நிகழ்ச்சியில் உதவி கலெக்டர் ராஜன், தாசில்தார் ராஜசேகர், நகர்மன்ற தலைவர் மாரிமுத்து, வட்டார ஆத்மாகுழு தலைவர் ஆனந்த், திருமருகல் வட்டார ஆத்மாகுழு தலைவர் செல்வசெங்குட்டுவன், ஊராட்சி மன்ற தலைவர்கள் செம்மலர், மகேஸ்வரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.