பயனாளிகளுக்கு ரூ.16½ லட்சத்தில் நலத்திட்ட உதவி
மேலஇலந்தைகுளத்தில் பயனாளிகளுக்கு ரூ.16½ லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.;
மானூர் தாலுகா மேலஇலந்தைகுளம் ஊராட்சியில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நேற்று நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் செந்தில்குமார் தலைமை தாங்கி, 52 பயனாளிகளுக்கு ரூ.16 லட்சத்து 42 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மேலும் முகாமில் மொத்தம் 219 மனுக்கள் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டு, 111 மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்டன. 108 மனுக்கள் பரிசீலனையில் உள்ளது.
முகாமில் சுகாதாரத்துறை, வேளாண்மை துறை, தோட்டக்கலைத்துறை, மகளிர் திட்டம், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்டம் போன்ற பல்வேறு துறைகளின் செயல்முறை பணிகள் மற்றும் விழிப்புணர்வு கண்காட்சியை மாவட்ட வருவாய் அலுவலர் செந்தில்குமார் பார்வையிட்டார்.
முகாமில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சுரேஷ், நெல்லை உதவி கலெக்டர் (பொறுப்பு) கார்த்திகேயினி, வேளாண்மை துறை இணை இயக்குனர் முருகானந்தம், பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் உஷா, கிராம பஞ்சாயத்து உதவி இயக்குனர் அனிதா, மானூர் யூனியன் தலைவர் ஸ்ரீலேகா அன்பழகன், துணைத்தலைவர் கலைச்செல்வி, மேலஇலந்தைகுளம் பஞ்சாயத்து தலைவர் சுமதி ஸ்டெல்லா, துணைத்தலைவர் ஆறுமுகத்துரை, மானூர் தாசில்தார் முத்துலட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.