முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி ஏழை மக்களுக்கு நலத்திட்ட உதவிகள்- அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் அறிக்கை
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி ஏழை மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க வேண்டும் என அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.
காரைக்குடி,
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி ஏழை மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க வேண்டும் என அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் ெதரிவித்துள்ளார்.
வாக்குறுதி
சிவகங்கை மாவட்ட தி.மு.க செயலாளரும், கூட்டுறவுத்துறை அமைச்சருமான கேஆர்.பெரிய கருப்பன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
முதல்-அமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் 70-வது பிறந்தநாள் கொண்டாடப்பட உள்ளது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நலத்திட்டங்களை நிறைவேற்றி, செயல்படுத்தியும் வருகிறார். தேர்தல் அறிக்கையில் கூறப்பட்ட 85 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளார்.
கூறப்படாத வாக்குறுதிகளையும் நிறைவேற்றி வருகிறார். இந்தியாவிலேயே தமிழகத்தை முதல் மாநிலமாக கொண்டுவர பணியாற்றி வருகிறார். மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழா தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் கொண்டாடப்பட உள்ளது.
பிறந்த நாள் விழா
எனவே சிவகங்கை மாவட்டத்தில் கட்சியினர் தங்களது ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, ஒன்றிய பகுதிகளில் தி.மு.க. கொடியேற்றியும், ஏழை, எளிய, ஆதரவற்றோர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கியும், தி.மு.க. அரசின் இரண்டு ஆண்டு கால சாதனைகளை மக்களிடம் விளக்கி கூறியும், இனிப்பு வழங்கி கொண்டாட வேண்டும். மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழாவில் தேசிய தலைவர்கள் பங்கேற்று வாழ்த்த உள்ளார்கள். முதல்-அமைச்சர் பிறந்த நாள் பொதுக்கூட்டம் இந்திய அரசியலை தமிழகம்தான் நிர்ணயிக்க உள்ளது என்பதை பறைசாற்றிடும் வகையில் அமைய உள்ளது. எனவே மாவட்ட , ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வேண்டும்
இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.