23 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை தென்காசி மாவட்ட கலெக்டர் ஆகாஷ் வழங்கினார்

Update: 2022-10-17 18:45 GMT

தென்காசி மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் தென்காசி கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் ஆகாஷ் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயினுலாப்தீன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஜெயபிரகாஷ், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் கந்தசாமி, உதவி ஆணையர் (கலால்) ராஜ மனோகரன் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் பொதுமக்கள் இலவச வீட்டு மனை பட்டா, முதியோர் உதவித்தொகை, அடிப்படை வசதிகள், பட்டா மாறுதல், மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை உள்ளிட்ட 415 மனுக்கள் வழங்கினர். இந்த மனுக்கள் மீது பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை எடுக்க அனைத்து துறை அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.

கூட்டத்தில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை மூலம் 10 பயனாளிகளுக்கு ரூ.55 ஆயிரம் மதிப்பிலான இலவச தையல் எந்திரங்கள், 10 பயனாளிகளுக்கு ரூ.47 ஆயிரத்து 500 மதிப்புள்ள இலவச தேய்ப்பு பெட்டிகள் ஆகியவற்றை வழங்கினார்.

மேலும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் உதவி உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் ரூ.8 ஆயிரம் மதிப்பிலான எழுத்தை பெரிதாக்கி காட்டும் உரு பெருக்கி பார்வை திறன் அளவு குறைந்த 2 பேருக்கும் மற்றும் பார்வையற்ற ஒருவருக்கு இலவச பஸ் பயண அடையாள அட்டை ஆகியவற்றையும் வழங்கினார்.


Tags:    

மேலும் செய்திகள்