ரூ.400 கோடியில் நலத்திட்ட உதவிகள்
கடந்த ஓராண்டில் தொழிலாளர்களுக்கு ரூ.400 கோடியில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது என்று தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நலவாரிய தலைவர் தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரியில் தமிழ்நாடு விவசாயிகள் தொழிலாளர்கள் கட்சி, தமிழக கட்டிட தொழிலாளர்கள் மத்திய சங்கம், தமிழ்நாடு அமைப்புசாரா தொழிலாளர்கள் மத்திய சங்கம், பொன்குமார் இளைஞர் அணி சார்பில், கிழக்கு மாவட்ட பொதுக்குழுக் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் துரை.மதிவாணன் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் ஆஞ்சப்பா, பொன்.குமார், இளைஞர் அணி மாவட்ட செயலாளர் சீனிவாசன், மாவட்ட இணை தலைவர் சர்தார், மாவட்ட துணை தலைவர்கள் சீனிவாசன், தருமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் ராகவரஜினி வரவேற்றார். இதில் தமிழ்நாடு அரசு கட்டுமான தொழிலாளர் நலவாரிய தலைவர் பொன்.குமார் கலந்து கொண்டு பேசினார். இதில் மாநில துணைத்தலைவர் அழகேசன், இணை பொதுச்செயலாளர் ஜெகதீசன், மாநில இளைஞர் அணி துணைத்தலைவர் பிரபு, மாநில துணைத்தலைவர் முருகன் மற்றும் கட்டுமான தொழிலாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் பொன்.குமார் கூறுகையில், கடந்த ஓராண்டில் 4 லட்சம் கேட்பு மனுக்களுக்கு உடனடியாக ஒப்புதல் அளிக்கப்பட்டு தொழிலாளர்களுக்கு ரூ.400 கோடியில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு உள்ளது. கட்டுமான பொருட்களின் விலையை கட்டுப்படுத்த விலை நிர்ணயக்குழு அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.