தர்மபுரி மாவட்டம் முழுவதும் பள்ளிகள் திறப்பு மாணவ-மாணவிகளுக்கு ஆரத்தி எடுத்து வரவேற்பு

கோடை விடுமுறைக்கு பின் தர்மபுரி மாவட்டத்தில் பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டன. மாணவ-மாணவிகளுக்கு ஆசிரியைகள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.

Update: 2022-06-13 17:05 GMT

தர்மபுரி:

கோடை விடுமுறைக்கு பின் தர்மபுரி மாவட்டத்தில் பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டன. மாணவ-மாணவிகளுக்கு ஆசிரியைகள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.

பள்ளிகள் திறப்பு

தமிழகம் முழுவதும் கோடை விடுமுறைக்கு பின் ஜூன் மாதம் 13-ந் தேதி முதல் 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்தது. அதன்படி தர்மபுரி மாவட்டத்திலுள்ள அனைத்து பள்ளிகளும் நேற்று திறக்கப்பட்டன. மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மழலையர், தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகள் மற்றும் தனியார் மெட்ரிக் பள்ளிகள் உள்ளிட்ட அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்டன.

பள்ளிகள் திறந்ததையொட்டி அந்தந்த பள்ளிகளில் வகுப்பறைகள் மற்றும் பள்ளி வளாகம் கடந்த 2 நாட்களாக தூய்மைப்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்றது. மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் வகுப்பறைகள் தூய்மைப்படுத்தப்பட்டு, கிருமிநாசினி தெளிக்கப்பட்டு மாணவர்கள் அமரும் டேபிள், டெஸ்க்குகள் தூய்மைப்படுத்தப்பட்டன. பள்ளி வளாகத்தில் கிடந்த குப்பைகள் அகற்றப்பட்டு பிளீச்சிங் பவுடர் போடப்பட்டது.

மாணவர்கள் ஆர்வம்

மாவட்டத்தில் தற்போது வைரஸ் பாதிப்பு குறைந்துள்ள நிலையில் நேற்று அவ்வையார் அரசு பெண்கள் பள்ளி உள்ளிட்ட பள்ளி மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் வந்தனர். 1 முதல் 10-ம் வகுப்பு வரை மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் அனைவரும் பள்ளி முக கவசம் அணிந்து வந்தனர். மாணவ-மாணவிகளை பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரிய-ஆசிரியைகள், பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் வரவேற்றனர். இறைவணக்க கூட்டத்துடன் பள்ளிகள் அனைத்தும் நேற்று முதல் செயல்பட தொடங்கின.

ஆரத்தி எடுத்து வரவேற்பு

கடகத்தூர் அரசு பள்ளி உள்ளிட்ட பெரும்பாலான பள்ளிகளில் மாணவ-மாணவிகளை ஆசிரியைகள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். சில பள்ளிகளில் மாணவ-மாணவிகளுக்கு இனிப்பு வழங்கினர். அனைத்து பள்ளிகளிலும் முதல் நாளில் மாணவ-மாணவிகளுக்கு புத்துணர்ச்சி வகுப்புகள் நடத்தப்பட்டது. ேமலும் நீதி போதனை வகுப்புகளும் நடத்தப்பட்டன. பின்னர் மாணவ-மாணவிகளுக்கு பாட புத்தகங்கள் வழங்கப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்