நீலகிரியில் களைகட்டிய கோடை சீசன் - படகு சவாரி செய்து சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

நீலகிரியில் கோடை சீசன் களைகட்டி உள்ளது. அங்குள்ள பைக்காராவில் படகு சவாரி செய்து, சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Update: 2023-05-14 20:15 GMT

மலைப்பிரதேசமான நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் கோடை சீசனும், அக்டோபர், செப்டம்பர் மாதங்களில் 2-வது சீசனும் நடைபெறும். இந்த சீசன் சமயத்தில் தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்வார்கள்.

அதன்படி தற்போது நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசன் தொடங்கியுள்ளது. இதன் காரணமாக சுற்றுலா பயணிகள் கூட்டம் தினமும் அதிகரித்து வருகிறது. மேலும் சமவெளி பகுதியில் அக்னி நட்சத்திரம் தொடங்கி விட்டதால், கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க குளுகுளு காலநிலை நிலவும் நீலகிரியில் சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர்.

குறிப்பாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா போன்ற வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்துள்ளனர். இதனால் நீலகிரியில் கோடை சீசன் களைகட்டி உள்ளது. இந்த நிலையில் ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் நேற்று வழக்கத்தைவிட சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக இருந்தது. நுழைவு வாயிலில் டிக்கெட் பெற கூட்டம் அலைமோதியது.

அவர்கள் கண்ணாடி மாளிகையில் உள்ள பூந்தொட்டிகளில் பூத்துக்குலுங்கிய மலர்களை கண்டு ரசித்து புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். மேலும் அங்குள்ள பல வகையான கள்ளி செடிகளையும் பார்வையிட்டனர்.

இதற்கிடையில் நேற்று முன்தினம் ரோஜா பூங்காவில் கண்காட்சி தொடங்கியது. இதில் பல வண்ண ரோஜா மலர்களால் ஈபிள் டவர் உள்பட பல்வேறு அலங்காரங்கள் செய்து, காட்சிப்படுத்தப்பட்டு இருந்தது. இதை 2-வது நாளாக நேற்றும் சுற்றுலா பயணிகள் கண்டுகளித்தனர்.

ஊட்டி-கூடலூர் சாலையில் உள்ள பைக்காரா படகு இல்லத்தில் சுற்றுலா பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருந்து மோட்டார் படகு, அதிவேக படகில் சவாரி செய்து மகிழ்ந்தனர். மேலும் ஊட்டி படகு இல்லத்தில் மிதி படகு, துடுப்பு படகு, மோட்டார் படகில் சவாரி செய்தனர்.

இது தவிர பைன்பாரஸ்ட், சூட்டிங்மட்டம், தேயிலை பூங்கா உள்ளிட்ட சுற்றுலா தலங்களிலும் கூட்டம் அதிகரித்து இருந்தது.

ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் கடந்த 2 நாட்களில் மட்டும் 50 ஆயிரம் சுற்றுலா பயணிகளும், ரோஜா பூங்காவில் 40 ஆயிரம் சுற்றுலா பயணிகளும் வந்து சென்றது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்