கோவையில் களைகட்டிய ஓணம் பண்டிகை
கோவையில் ஓணம் பண்டிகை களைகட்டியது. கேரள மக்கள் தங்களது வீடுகளின் முன்பு அத்தப்பூ கோலமிட்டு உற்சாகமாக கொண்டாடினர்.
கோவை
கோவையில் ஓணம் பண்டிகை களைகட்டியது. கேரள மக்கள் தங்களது வீடுகளின் முன்பு அத்தப்பூ கோலமிட்டு உற்சாகமாக கொண்டாடினர்.
ஓணம் பண்டிகை
கேரளாவை மகாபலி மன்னர் ஆட்சி செய்த காலத்தில் மக்கள் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மகாபலி முன்பு தோன்றிய திருமால் தனக்கு 3 அடி நிலம் வேண்டும் என்று கேட்டார். அதற்கு மன்னர் அனுமதி அளித்ததும், அசுர வளர்ச்சியடைந்த திருமால் கேரளாவை 2 அடியில் அளந்து முடிந்தார். 3-வது அடிக்கு நிலம் இல்லாததால் மகாபலி மன்னர் தனது தலையை 3-வது அடியாக கொடுத்தார். அப்போது அவர் தனது மக்களை சந்திக்க ஆண்டுக்கு ஒருமுறை அனுமதி வழங்க வேண்டும் என்று திருமாலிடம் கேட்டதாக கூறப்படுகிறது.
இதன்படி ஆண்டுக்கு ஒருமுறை மகாபலி மன்னர் நகர்வலம் வருவார் என்பது கேரள மக்களின் ஐதீகம். இந்த நாளை கேரள மக்கள் ஓணம் பண்டிகையாக கொண்டாடி வருகின்றனர். இந்த தினத்தில் கேரள மக்கள் தங்கள் வீடுகளின் முன்பு அத்தப்பூ கோலமிட்டு மகாபலி மன்னர் வரவேற்று வருகின்றனர்.
உற்சாக கொண்டாட்டம்
இந்த நிலையில் நேற்று உலகெங்கிலும் வாழும் கேரள மக்கள் ஓணம் பண்டிகையை வெகுவிமர்சையாக கொண்டாடினர். கேரளாவை ஒட்டிய கோவை மாவட்டத்தில் ஓணம் பண்டிகை கொண்டாட்டம் காலை முதலே களை கட்டியது. அதிகாலையில் எழுந்த கேரள மக்கள் குளித்து, புத்தாடைகள் அணிந்து கோவில்களுக்கு சென்று வழிபாடு நடத்தினர். மேலும் தங்களது வீடுகளின் முன்பு அத்தப்பூ கோலமிட்டு உற்சாகமாக பண்டிகையை கொண்டாடினர்.
கோவை சித்தாபுதூரில் உள்ள அய்யப்பன் கோவிலில் காலையிலேயே சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. கோவிலில் வண்ணமலர்களால் அத்தப்பூ கோலமிட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. சிறப்பு பூஜைகளில் ஏராளமானவர்கள் கலந்துகொண்டனர். 1250 பேருக்கு மதிய உணவு அளிக்கப்பட்டது.
28 வகையான உணவு
கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா காரணமாக ஓணம் பண்டிகை கொண்டாட்டம் கலை இழந்திருந்த நிலையில் இந்த ஆண்டு மீண்டும் களைகட்ட தொடங்கி இருப்பதாக கோவிலுக்கு வந்த பக்தர்கள் தெரிவித்தனர். ஓணத்தையொட்டி பலரது வீடுகளில் சத்யா உணவு வகையாக 28 விதமான உணவுகள் வகை, வகையாக சமைத்து இருந்தனர். சாம்பார், பைனாப்பிள் பச்சடி, அவியல், ஓலன், துவையல், பாயாசம், அடப்பிரதம், இஞ்சிபுளி, அப்பளம் என பல வகைகள் இடம்பெற்று இருந்தன.
புது உணர்வு
இதுகுறித்து கோவையில் வசிக்கும் கேரள பெண்கள் கூறியதாவது:-
கேரளாவில் ஓணம் பண்டிகை கொண்டாடும் போது நிறைய போட்டிகள் நடக்கும். பூக்களை நேரடியாக சென்று பறித்து வந்து அத்தப்பூ கோலமிடும் அனுபவங்களும், உணர்வுகளும் இங்கு கிடைக்க வில்லை என்றாலும் கோவையில் கொண்டாடும் ஓணம் பண்டிகையும் மகிழ்வையும், புது உணர்வையும் கொடுத்துள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதேபோல் சங்கனூர் அய்யப்பன் கோவில் உள்பட கோவையில் உள்ள பல்வேறு அய்யப்பன் கோவில்கள், மலையாள சங்கங்களில் நடைபெற்ற ஓணம் திருவிழாவில் திரளானவர்கள் கலந்துகொண்டனர்.