களை கட்டிய மீன்பிடி திருவிழா

கோபால்பட்டி தைலாபிள்ளை குளத்தில் மீன்பிடி திருவிழா நேற்று களை கட்டியது.

Update: 2023-09-13 21:00 GMT

கோபால்பட்டி அருகே தி.பாறைப்பட்டியில் சுமார் 20 ஏக்கர் பரப்பளவில் தைலாபிள்ளை குளம் உள்ளது. கடந்த ஆண்டு பெய்த மழையால், இந்த குளம் நிரம்பியது. விவசாய பயன்பாட்டுக்கு தண்ணீரை பயன்படுத்திய நிலையில், தற்போது குளம் வற்றியது. இதனால் குளத்தில் மீன்பிடி திருவிழா நடத்த கிராம மக்கள் முடிவு செய்தனர். அதன்படி தி.பாறைப்பட்டி மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களில் மீன்பிடி திருவிழா குறித்து அறிவிக்கப்பட்டது. இதையடுத்து தைலாபிள்ளை குளத்தில் மீன்பிடி திருவிழா நேற்று களை கட்டியது.

கோபால்பட்டி, சாணார்பட்டி, சிலுவத்தூர், செங்குறிச்சி, செந்துறை, நத்தம், மேலூர், சிங்கம்புணரி, புதுக்கோட்டை உள்ளிட்ட  20-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் காலையிலேயே குளத்தில் குவிந்தனர். சிறுவர்கள், பெரியவர்கள், பெண்கள், இளைஞர்கள் என குடும்பம், குடும்பமாக வந்த ஏராளமான கிராம மக்கள் குளத்தில் இறங்கி மீன்களை போட்டிப்போட்டு பிடித்தனர். வலை, ஊத்தா கூடைகள் மூலம் கிராம மக்கள் மீன்களை பிடித்தனர். இவர்களிடம் கட்லா, ஜிலேபி, விரால், பாறை உள்ளிட்ட பல்வேறு வகையான மீன்கள் சிக்கின. அதிகபட்சமாக ஒரு மீன் 3 கிலோ வரை இருந்தது. பிடிபட்ட மீன்களை கிராம மக்கள், தங்களது வீடுகளுக்கு எடுத்து சென்று சமைத்து சாப்பிட்டனர். மேலும் அக்கம்பக்கத்தினருக்கு மீன்களை கொடுத்து மகிழ்ந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்