களை கட்டிய காசிமேடு: மீன் பிரியர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி
மீன்பிடி தடைக்காலம் முடிந்த நிலையில் காசிமேடு மார்க்கெட்டுக்கு மீன் வாங்க வந்த பொதுமக்கள் மீன்களின் விலையை கேட்டு அதிர்ச்சி அடைந்தனர்.;
சென்னை,
கடல் மீன் வளத்தை பாதுகாக்கும் வகையில் ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் முதல் ஜூன் மாதம் வரை 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த ஏப்ரல் 15-ஆம் தேதி முதல் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மீன்பிடி தடை காலம் தொடங்கியது.
இந்நிலையில் மீன் பிடி தடைக்காலம் முடிந்த பின் வரும் முதல் ஞாயிற்றுக்கிழமை என்பதால் இன்று காசிமேட்டில் பொதுமக்கள் மீன் வாங்க குவிந்தனர். பெரிய அளவிலான மீன்கள் எதுவும் கிடைக்காத நிலையில் சிறிய அளவிலான மீன்கள் அதிக அளவில் விற்பனைக்கு வந்திருந்தது.
அவற்றில் 1 கிலோ வஞ்சிரம் 1400 முதல் 1500 வரையும் , வவ்வால் கிலோவிற்கு ரூ.1000 முதல் ரூ.1500 வரையிலும் , சங்கரா கிலோவிற்கு ரூ.400 முதல் 800 ரூபாய் வரையிலும் விற்பனையாகிறது. அதேபோல் தோல் பாறை , நெத்திலி ,காரப்பொடி உள்ளிட்ட மீன்கள் 100 முதல் 300 ரூபாய் வரை விற்பனையாகிறது . இறால் கிலோ ரூ.400 முதல் ரூ.1300 வரை விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில் நண்டு ரூ.400 முதல் விற்பனையாகி வருகிறது. இந்நிலையில், மீன்களின் விலையை கேட்ட பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.