தர்மபுரி பகுதியில் மாட்டுப் பொங்கல் விழா கொண்டாட்டம்-கால்நடைகளுக்கு சிறப்பு வழிபாடு

Update: 2023-01-16 18:45 GMT

தர்மபுரி:

தர்மபுரி பகுதியில் மாட்டுப் பொங்கல் விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி கிராமங்கள் தோறும் கால்நடைகளுக்கு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.

மாட்டுப் பொங்கல் விழா

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை கடந்த 14-ந் தேதி போகி பண்டிகையுடன் தொடங்கியது. பொங்கல் பண்டிகையான நேற்று முன்தினம் வீடுகள் தோறும் பொதுமக்கள் சூரியனுக்கு பொங்கல் படைத்து, சிறப்பு வழிபாடு நடத்தினர். நேற்று மாட்டுப்பொங்கல் விழா உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. இதையொட்டி தர்மபுரி மாவட்டம் முழுவதும் கிராமங்கள் தோறும் கால்நடைகளுக்கு சிறப்பு வழிபாடு நடத்தினர்.

தர்மபுரி பகுதியிலும் மாட்டுப் பொங்கல் விழா வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. தர்மபுரி அன்னசாகரத்தில் உள்ள விநாயகர் மற்றும் திரவுபதி அம்மன் கோவில் முன்பு ஏராளமான விவசாயிகள் தங்களது மாடுகளை கொண்டு வந்து சிறப்பு வழிபாடு நடத்தினர். பின்னர் வீதி, வீதியாக மாடுகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டன.

இதேபோல் குமாரசாமிப்பேட்டை உழவர் தேரில் உள்ள மாரியம்மன் கோவில் முன்பும் ஏராளமான மாடுகளுக்கு சிறப்பு வழிபாடு நடத்தி ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. மதிக்கோன்பாளையம், குப்பாகவுண்டர் தெரு, இலக்கியம்பட்டி, குள்ளனூர், பழைய தர்மபுரி, ராஜாப்பேட்டை உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் மாட்டுப் பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

அதகபாடி-கடகத்தூர்

தர்மபுரி அருகே அதகபாடி கிராமத்தில் மாட்டுப் பொங்கல் விழாவையொட்டி ஏராளமான ஆடுகள் மற்றும் மாடுகளை அங்குள்ள கோவிலுக்கு அழைத்து வந்து சிறப்பு பூஜை செய்து ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டன. மாடுகளுக்கு விவசாயிகள் அலங்கார பொருட்கள் கட்டியும், வண்ண, வண்ண பலூன்கள் கட்டியும், கொம்புகளுக்கு வர்ணம் தீட்டியும் ஊர்வலமாக கொண்டு சென்றனர்.

இதேபோல் கடகத்தூரில் நடைபெற்ற மாட்டுப் பொங்கல் விழாவில் நூற்றுக்கணக்கான மாடுகள் பொது இடத்துக்கு அழைத்து வரப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. முன்னதாக கோவில் மாடு அலங்கரித்து ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. பின்னர் மேளதாளங்கள் முழங்க மாடுகள் மற்றும் கால்நடைகள் ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்டன.

நல்லம்பள்ளி, தொப்பூர், ஏரியூர், பென்னாகரம், அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, மொரப்பூர், கம்பைநல்லூர், காரிமங்கலம், மாரண்டஅள்ளி, பொம்மிடி, கடத்தூர் உள்ளிட்ட பகுதிகளிலும் மாட்டுப் பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

மேலும் செய்திகள்