கள்ளக்குறிச்சி: 'இன்ஸ்டாகிராம்' மூலம் காதல் வலை - பெண்களை ஆபாச வீடியோ எடுத்து உல்லாசம் அனுபவித்த வாலிபர்..!
இன்ஸ்டாகிராமில் டிப்டாப் உடையுடன் வீடியோக்கள் போடுவதை அருண்பிரசாத் வழக்கமாக வைத்துள்ளார்.;
கள்ளக்குறிச்சி,
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 58 வயது முதியவர். இவரது பேத்தியான பள்ளி மாணவி சோகத்துடன் இருந்தார். இதை பார்த்த அந்த முதியவர், தனது பேத்தியிடம் என்ன நேர்ந்தது என்று விசாரித்தார். அப்போதுதான் சங்கராபுரம் அருகே உள்ள ஆரூர் கிராமத்தை சேர்ந்த அருண்பிரசாத் (23) என்கிற சிட்டு என்பவர் மூலம் பாதிக்கப்பட்டதாக தெரிவித்தார்.
இதையடுத்து, அந்த முதியவர் தனது மகனுடன் அருண்பிரசாத் வீட்டுக்கு சென்று தட்டிக்கேட்டார். அப்போது, அருண்பிரசாத் சரியான பதில் அளிக்கவில்லை. இதையடுத்து அவரது செல்போனை பறித்து பார்த்தனர். அப்போது அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது, அவரது செல்போனில் பல பெண்களின் ஆபாச புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இருந்தன.
இதையடுத்து செல்போனை சங்கராபுரம் போலீசில் ஒப்படைத்து, இது தொடர்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்குமாறு மாணவியின் தாத்தா புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் அருண்பிரசாத் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில் திடுக்கிடும் தகவல் வெளியானது.
அதாவது, 10-ம் வகுப்பு வரை படித்து இருக்கும் அருண்பிரசாத், 'இன்ஸ்டாகிராமில்' வீடியோக்கள் போடுவதை வழக்கமாக கொண்டு இருந்துள்ளார். 'நமக்கென்ன ராஜா மாதிரி இருக்கோம்' என்ற வசனத்துடன் தனது டிப்டாப் உடை, கழுத்தில் ஐ.டி. கார்டு, காலில் ஷூ என பார்ப்பவர்களை கவரும் வகையில் புகைப்படத்துடன் ஒரு ரீல்ஸ் வீடியோ என்று பல வீடியோக்களை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு இருக்கிறார்.
இதன் மூலம் தனது பகுதியை சேர்ந்த பெண்களை கண்டறிந்து, அவர்களிடம் 'சாட்' செய்து பேசி வந்துள்ளார். இதில் இனிக்க இனிக்க பேசி அவர்களில் சிலரை தனது காதல் வலையில் வீழ்த்தி இருக்கிறார். குறிப்பாக வீடியோ காலில், பெண்களை தன்னுடன் பேச வைத்து, அவர்களது ஆடைகளை களைய செய்துள்ளார். அப்போது அவர்களுக்கே தெரியாமல் அதை வீடியோவாக தனது செல்போனில் பதிவு செய்து வைத்துக்கொண்டதாக கூறப்படுகிறது. மேலும், அந்த பெண்களின் ஆபாச புகைப்படங்களையும் தனக்கு அனுப்ப வைத்துள்ளார்.
இவ்வாறு வந்த வீடியோ, புகைப்படங்களை வைத்து சம்பந்தப்பட்ட பெண்களை மிரட்டி நகை, பணத்தை பறிப்பது போன்ற செயலில் ஈடுபட்டுள்ளார். ஒரு சில பெண்களை மிரட்டி உல்லாசமும் அனுபவித்ததாக கூறப்படுகிறது. இன்ஸ்டாகிராம் மூலம் தனது கிராமத்தை சுற்றிய பல பெண்களின் வாழ்வை சீரழித்து வந்து இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, அருண்பிரசாத்தை போலீசார் கைது செய்ய சென்றனர். ஆனால் அவர் தலைமறைவாகி விட்டார். அருண்பிரசாத்தின் தாய் சவுதியில் வசித்து வருகிறார். எனவே அவர் வெளிநாட்டுக்கு தப்பி செல்லும் வகையில், சென்னைக்கு சென்று இருக்கலாம் என்று கூறப்படுகிறது. அதன்பேரில் போலீசார் அருண்பிரசாத்தை பிடிக்க சென்னை விரைந்துள்ளனர்.