நெசவாளர்கள் உண்ணாவிரத போராட்டம்

ஆரணியில் 36 அமைப்புகள் ஆதரவுடன் நெசவாளர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-07-31 10:34 GMT

ஆரணி

ஆரணியில் 36 அமைப்புகள் ஆதரவுடன் நெசவாளர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உண்ணாவிரத போராட்டம்

மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தும் வகையில் கைத்தறி நெசவாளர்கள் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டியும், விசைத்தறியில் பட்டு சேலை உற்பத்தியை தடை செய்ய வலியுறுத்தியும் ஆரணி பழைய பஸ் நிலையம் மணிக்கூண்டு அருகில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. நெசவாளர்களின் கூட்டமைப்பு தலைவர் கே.பி.பரமாத்மா தலைமை தாங்கினார்.

உண்ணாவிரத போராட்டத்தை கைத்தறி சம்மேளனம் சி.ஐ.டி.யூ. பொது செயலாளர் இ.முத்துக்குமார் தொடங்கி வைத்து பேசினார்.

தடை செய்ய வேண்டும்

அப்போது அவர் பேசுகையில், கைத்தறி ரக ஒதுக்கீடு சட்டம் 1985-ன் படி விசைத்தறியில் பட்டு சேலை ரகங்களை உற்பத்தி செய்வதை தடுத்து நிறுத்த வேண்டும்,

மத்திய அரசே அண்டை பகுதிகளான பெங்களூரு, எலன்கா, கப்பன்பேட், இந்துப்பூர் தர்மாவரம், மதனப்பள்ளி ஆகிய இடங்களில் விசைத்தறியில் பட்டு சேலை ரகங்களை உற்பத்தி செய்வதை தடை செய்ய வேண்டும்.

பிராந்திய கைத்தறி அமலாக்க பிரிவு விசைத்தறிக்கூடங்களை கண்காணித்து சட்டத்தை மீறும் விசைத்தறி உரிமையாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,

தமிழ்நாடு அரசு ஆரணி வட்டத்தில் விற்பனையாகாமல் தேங்கியுள்ள பட்டு சேலைகளை கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் கொள்முதல் செய்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.

இதில் முன்னாள் அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு நெசவாளர்களுக்கு ஆதரவாக பேசினார்.

36 அமைப்புகள் ஆதரவு

மேலும் சி.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர் இரா.பாரி, மாவட்ட துணைத்தலைவர் எம்.வீரபத்திரன், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் பி.கண்ணன், சி.அப்பாசாமி உள்பட நெசவாளர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள், பட்டு சேலை உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அதனைத்தொடர்ந்து உண்ணாவிரத போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு, ஆரணி தாலுகா அனைத்து வியாபாரிகள் சங்கம், ஆரணி தாலுகா நெல், அரிசி வியாபாரிகள் சங்கம்,

பல சரக்கு வியாபாரிகள் சங்கம், காய்கறி வியாபாரிகள் சங்கம், சிறுகுறு பெரு வாணிபம் செய்வோர் நலச்சங்கம், நுகர்பொருள் வினியோகிஸ்தர்கள் சங்கம், அச்சக உரிமையாளர்கள் நலச்சங்கம், பொன், வெள்ளி, நகை, அடகு வியாபாரிகள் சங்கம், ஓட்டல் சங்கம், பழ வியாபாரிகள் சங்கம்,

தையற்கலை தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கம், சலவை தொழிலாளர், முடி திருத்துவோர், பந்தல் அமைப்பாளர்கள், புஷ்ப வியாபாரம், ரியல் எஸ்டேட் பில்டர்ஸ், எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ், ஜவுளி வியாபாரம், மருந்து வியாபாரம், ரோட்டரி சங்கம், ஹோஸ்ட் லயன்ஸ் சங்கம், ரெட் கிராஸ் சங்கம், கோணிப்பை வியாபாரிகள் சங்கம் உள்பட 36 அமைப்புகள் ஆதரவு தெரிவித்து இருந்தன.

போக்குவரத்து பாதிப்பு

உண்ணாவிரத போராட்டம் நடைபெற்ற மணிகூண்டு அருகில் இருந்து காந்தி ரோட்டில் 100-க்கும் மேற்பட்ட கடைகளுக்கு வியாபார பாதிப்பும், போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டது.

வாரத்தில் முதல் நாள் என்பதால் கல்லூரி, பள்ளிகளுக்கு செல்லக்கூடிய பஸ்கள் மிகவும் சிரமத்துக்குள்ளானது.

இனிவரும் காலங்களில் இது போன்ற அதிகப்படியான நபர்கள் கலந்து கொள்ளும் போராட்டங்களை நகரின் உள்ள தர்மராஜா கோவில் மைதானம், கோட்டை மைதானம் உள்ளிட்ட இடங்களில் நடத்திக் கொள்ள வேண்டுமென பொதுமக்கள் கருத்து தெரிவித்தனர்.

ஆரணி சுற்றுவட்டார பகுதியில் உள்ள நெசவாளர்கள் நெசவுக்கூடங்களுக்கு விடுமுறை விடுத்தும், பட்டு சேலை வியாபாரிகள் கடைகளை அடைத்தும் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

இதில் ஆயிரக்கணக்கான நெசவாளர்கள் பங்கு பெற்றனர்.

அரசு உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனில் அடுத்த கட்ட போராட்டத்திற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று நெசவாளர்கள் தெரிவித்தனர்.

மாலையில் ஆரணி பட்டு கைத்தறி ஜவுளி வியாபாரிகள் சங்கத் தலைவர் டி.எச்.குருராஜாராவ் உண்ணாவிரத போராட்டத்தை முடித்து வைத்தார்.

Tags:    

மேலும் செய்திகள்