செல்வமகள் சேமிப்பு திட்ட சிறப்பு முகாம்கள்
செல்வமகள் சேமிப்பு திட்ட சிறப்பு முகாம்கள்
காரைக்குடி
காரைக்குடி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் ஹூசைன் அகமத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
காரைக்குடி அஞ்சல் கோட்டத்தில் உள்ள அனைத்து அஞ்சல் அலுவலகங்களிலும் செல்வமகள் சேமிப்பு திட்ட திருவிழா கடந்த 15-ந்தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த விழா வரும் அக்டோபர் மாதம் 11-ந் தேதி வரை நடைபெற உள்ளதால் இத்திட்டத்தில் பெண் குழந்தைகளை சேர்ப்பதற்காக சிறப்பு முகாம்கள் நடைபெறுகிறது. இந்த செல்வமகள் சேமிப்பு திட்டத்தின் மூலம் 10 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகளின் பெற்றோர் அல்லது பாதுகாவலர்கள் இந்த கணக்கை ரூ.250 செலுத்தி அஞ்சலகங்களில் தொடங்கலாம். ஒரு நிதியாண்டில் குறைந்தபட்ச தொகை ரூ.250ம், அதிக பட்ச தொகை ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் வரை கணக்கில் செலுத்தலாம். அசலுடன் சேர்ந்து வட்டியும் அடுத்த வருட அசலாக கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். தற்போதைய வட்டி 7.6 சதவீதம் ஆகும்.. செல்வ மகள் சேமிப்பு கணக்கு 21 ஆண்டுகளுக்கு நடப்பில் இருக்கும். பெண் குழந்தையானது 10-ம் வகுப்பு படித்து முடிந்தோ அல்லது 18 வயது அடைந்ததும் மேற்படிப்பிற்காக 50 சதவிகித தொகையை பெறலாம். பெண் குழந்தையின் திருமணத்தின் போது முழு தொகையையும் எடுத்துக்கொள்ளலாம். எனவே செல்வமகள் சேமிப்பு திருவிழாவில் பங்கேற்று இந்த திட்டத்தை தொடங்கி பயனடையலாம். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.