வலுவிழந்த அரசு கட்டிடம்...இடித்து அகற்றப்படுமா?

பொள்ளாச்சி பஸ் நிலையம் அருகே வலுவிழந்த அரசு கட்டிடம்...இடித்து அகற்றப்படுமா? என்று பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

Update: 2023-09-18 21:45 GMT

 நெகமம்

பொள்ளாச்சி பஸ் நிலையம் அருகே வலுவிழந்த அரசு கட்டிடம்...இடித்து அகற்றப்படுமா? என்று பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

அரசு கட்டிடம்

பொள்ளாச்சி பஸ் நிலையம் அருகே வடக்கு ஒன்றிய அலுவலகம் உள்ளது. இதன் வளாகத்தில் 40 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட குடோன் மற்றும் கடைகளை கொண்ட கட்டிடம் உள்ளது.இங்குள்ள குடோனில், ஒன்றியத்துக்கு உட்பட்ட ஊராட்சிகளில் நடைபெறும் வளர்ச்சி பணிகளுக்கு பயன்படுத்தப்படும் சிமெண்டு மூட்டைகள் இருப்பு வைக்கப்படும். மேலும் கடைகள் வாடகைக்கு விடப்பட்டு இருந்தது.

சுவர்களில் விரிசல்

ஆனால் முறையான பராமரிப்பு இல்லாததால், நாளடைவில் அந்த கட்டிடம் பழுதடைய தொடங்கியது. மேற்கூரைகள் மற்றும் சுவர்களில் விரிசல் ஏற்பட்டது. சிமெண்டு பூச்சு பெயர்ந்து விழ தொடங்கியது.

இதனால் மழைநீர் உள்ளே வழிந்து வந்தது. இதன் காரணமாக கடைகளை நடத்த முடியாத நிலையும், சிமெண்டு மூட்டைகளை இருப்பு வைக்க முடியாத நிலையும் ஏற்பட்டது. அதன்பிறகு அந்த கட்டிடம் முற்றிலும் பராமரிப்பு இன்றி வலுவிழந்து போனது.

புதிய கட்டிடம்

இதனால் தற்போது அந்த கட்டிடம் சுவரொட்டிகள் ஒட்டும் பகுதியாக மாறி உள்ளது. மேலும் கட்டிடத்தை சுற்றிலும் சிறுநீர், மலம் கழித்து திறந்தவெளி கழிப்பிடமாக மாற்றி வைத்து உள்ளனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, வடக்கு ஒன்றிய அலுவலக வளாகத்தில் குடோன் மற்றும் கடைகள் செயல்பட்டு வந்த கட்டிடம் தற்போது பழுதடைந்து எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. அது இரவு நேரங்களில் மது அருந்தும் இடமாக மாறி வருகிறது. எனவே அந்த கட்டிடத்தை இடித்து அகற்றிவிட்டு, புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்