நாடாளுமன்ற தேர்தலுக்காக பா.ஜ.க.வை வலுப்படுத்துவோம்

நாடாளுமன்ற தேர்தலுக்காக பா.ஜ.க.வை வலுப்படுத்துவோம் என்று குன்னூரில் நடந்த பாத யாத்திரையில் அண்ணாமலை தெரிவித்தார்.

Update: 2023-09-28 22:30 GMT

குன்னூர்

நாடாளுமன்ற தேர்தலுக்காக பா.ஜ.க.வை வலுப்படுத்துவோம் என்று குன்னூரில் நடந்த பாத யாத்திரையில் அண்ணாமலை தெரிவித்தார்.

பாத யாத்திரை

பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை 'என் மண் என் மக்கள்' என்ற பாத யாத்திரையை சட்டமன்ற தொகுதிகளில் மேற்கொண்டு வருகிறார். நீலகிரி மாவட்டத்தில் 2-வது நாளாக குன்னூர் தொகுதியில் நேற்று மதியம் பாத யாத்திரையை தொடங்கினார்.

சிம்ஸ் பார்க் பகுதியில் இருந்து பெட்போர்டு, அரசு லாலி ஆஸ்பத்திரி வழியாக சென்று பஸ் நிலையம் பகுதியில் பாத யாத்திரை முடிந்தது. அப்போது அவருக்கு பா.ஜ.க. நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் மலர்கள் தூவி உற்சாகமாக வரவேற்பு அளித்தனர். மேலும் பலர் அவருடன் செல்பி மற்றும் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். பின்னர் பஸ் நிலையம் பகுதியில் நடந்த கூட்டத்தில் அண்ணாமலை பேசியதாவது:-

தேசிய சிந்தனை

குன்னூர் பகுதியில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் இறந்தார். முழு இந்தியாவின் பார்வையும் இங்கிருந்த போது, விபத்தில் சிக்கியவர்களை மீட்பது உள்பட பல்வேறு உதவிகளை குன்னூர் பகுதி மக்கள் செய்தனர். மேலும் இறந்தவர்களின் உடல்களை வீரவணக்கத்துடன் அனுப்பி வைத்தனர். தேசிய சிந்தனை கொண்ட மக்கள் உள்ள குன்னூரில் பேசுவது மகிழ்ச்சியளிக்கிறது.

கூடலூரில் வனவிலங்குகள் தாக்குதல், 10 ஆயிரம் குடியிருப்புகளுக்கு மின் இணைப்பு இல்லாதது உள்பட நீலகிரியில் பல்வேறு பிரச்சினைகள் உள்ளன. ஆனால், 2ஜி குற்றச்சாட்டில் சிக்கிய ஆ.ராசா எம்.பி. நீலகிரிக்கு சுற்றுலா பயணி போல் 2 மாதத்திற்கு ஒருமுறை வந்து செல்கிறார். காமராஜர் ஆட்சி காலத்தில் நீலகிரியில் குந்தா, எமரால்டு, கெத்தை உள்பட பல்வேறு அணைகள் கட்டப்பட்டன. இதன் மூலம் 830 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

நவோதயா பள்ளிகள்

சாதாரண மக்களின் குழந்தைகளும் நல்ல கல்வி பெறுவதற்காக நாடு முழுவதும் 625 நவோதயா பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த பள்ளிகளில் 2 லட்சத்து 78 ஆயிரத்து 356 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இதில் 89 சதவீதம் பேர் கிராமப்புறங்களை சேர்ந்தவர்கள். 25 சதவீதம் பேர் பட்டியல் சமுதாயத்தை சேர்ந்தவர்கள்.

நாடு முழுவதும் நவோதயா பள்ளிகள் இருக்கும் நிலையில், தமிழகத்தில் ஒரு பள்ளி கூட இல்லை. நவோதயா பள்ளிகளில் 6 முதல் 8-ம் வகுப்பு வரை அந்தந்த மாநில மொழிகளில் தான் கல்வி கற்பிக்கப்படுகிறது. பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் மாவட்டத்திற்கு 2 நவோதயா பள்ளிகளுக்கு அனுமதி வழங்கப்படும். இதன் மூலம் ஏழை, எளிய குழந்தைகளுக்கு உலகத்தரம் வாய்ந்த நவீன கல்வி கிடைக்கும்.

பா.ஜ.க.வை வலுப்படுத்துவோம்

நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று 3-வது முறையாக மோடி பிரதமர் ஆவார். அதற்கு நீலகிரி தொகுதியில் இருந்து ஒரு பா.ஜ.க. எம்.பி.யை தேர்ந்து எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

பின்னர் அண்ணாமலை நிருபர்களிடம் கூறுகையில், 'என் மண் என் மக்கள்' பாத யாத்திரையில் மட்டும் தான் தற்போது அனைவரின் கவனமும் உள்ளது. வருகிற நாடாளுமன்ற தேர்தலுக்காக பா.ஜ.க.வை வலுப்படுத்தும் வேலையில் ஈடுபட்டு உள்ளோம் என்றார்.

இதில் மாநில பொதுச்செயலாளர் முருகானந்தம், மாநில செயற்குழு உறுப்பினர் போஜராஜன், மாநில விவசாய அணி செயலாளர் சவுந்திரபாண்டியன், மாவட்ட தலைவர் மோகன்ராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

ரெயில்வேயில் வேலை கேட்டு அண்ணாமலையிடம் முறையீடு

குன்னூரில் பாத யாத்திரையின் போது, ரெயில்வேயில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு அப்ரண்டிஸ் பயிற்சி முடித்தவர்கள் அண்ணாமலையை சந்தித்து கோரிக்கை விடுத்தனர். அவர்கள் பயிற்சி முடித்து 15 ஆண்டுகள் ஆகியும் இதுவரை வேலை கிடைக்கவில்லை. ரெயில்வேயில் வேலை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். அதற்கு அண்ணாமலை, பாத யாத்திரையில் பெண்களை அழைத்து வந்து அழ வைக்கக்கூடாது. இதுதொடர்பாக சட்டப்படி என்ன செய்ய முடியுமோ, அது செய்யப்படும். ரெயில்வே மந்திரியின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும் என்றார். 

Tags:    

மேலும் செய்திகள்