நீட்தேர்வில் இருந்து தமிழகம் விலக்கு பெறும்வரை நாங்கள் ஓயமாட்டோம்

நீட்தேர்வில் இருந்து தமிழகம் விலக்கு பெறும்வரை நாங்கள் ஓயமாட்டோம் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார்.

Update: 2023-10-21 20:37 GMT

பேட்டி

தஞ்சையில், தமிழ்நாடு மகளிர் ஆணையம் மற்றும் தேசிய இணைய பாதுகாப்பு ஆராய்ச்சி அமைப்பு சார்பில் சமூக ஊடகங்களில் பெண்களுக்கு எதிரான குற்றம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது.

இதில் கலந்து கொண்ட அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நிருபர்களிடம் கூறியதாவது:-

ஓயமாட்டோம்

நீட் தேர்வில் இருந்து தமிழகம் முழுவதும் விலக்கு பெறும்வரை நாங்கள் ஓயமாட்டோம். எதிர்க்கட்சியாக இருக்கும்போதும், தற்போது ஆளும் கட்சியாக இருந்து பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றியும் மத்திய அரசு காதில் போட்டுக்கொள்ளாமல் இருப்பது மிகவும் வேதனைக்குரிய விஷயமாகும்.

நீட் தேர்வு விவகாரத்தில் 22 பேருக்கு மேல் நம் குழந்தைகளை இழந்திருக்கிறோம். இதனை பார்த்தும்கூட இன்னமும் மனம் இரங்காமல் இருக்கிற மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கும் விதமாக தமிழகம் முழுவதும் தி.மு.க. சார்பில் கையெழுத்து இயக்கம் நடைபெறுகிறது. இதில் குறைந்தது சுமார் 50 லட்சம் பேரிடமாவது கையெழுத்து வாங்கவுள்ளோம். நீட் தேர்வை ஒழித்தே தீருவோம் என இந்த இயக்கத்தை தொடங்கியுள்ளோம்.

பேச்சுவார்த்தை

திருமண்டங்குடி சர்க்கரை ஆலை நிர்வாகத்தை கண்டித்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பாதிக்கப்பட்டுள்ள கரும்பு விவசாயிகளுக்கு நீதி கிடைப்பதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுக்கொண்டு இருக்கிறோம். அந்த விவசாயிகளின் எண்ணங்களை நிறைவேற்றுவதற்காகத்தான் நாங்கள் போராடிக்கொண்டிருக்கிறோம். இதற்கு நல்ல தீர்வு எட்டும் வரை பொறுமையாக இருக்க வேண்டும், கண்டிப்பாக இதற்கு நல்ல தீர்வு கிடைக்கும்.

கொள்முதல் செய்யப்படும் நெல்லின் ஈரப்பதத்தை அதிகரிக்க வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கை தொடர்பாக தமிழக முதல்-அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்