3-வது நீதிபதியின் தீர்ப்பில் எங்களுக்கு நியாயம் கிடைக்கும்
செந்தில் பாலாஜி வழக்கில் 3-வது நீதிபதியின் தீர்ப்பில் எங்களுக்கு நியாயம் கிடைக்கும் என்று அமைச்சர் ரகுபதி கூறினார்.
செந்தில் பாலாஜி வழக்கில் 3-வது நீதிபதியின் தீர்ப்பில் எங்களுக்கு நியாயம் கிடைக்கும் என்று அமைச்சர் ரகுபதி கூறினார்.
சாமி தரிசனம்
நாகை மாவட்டம் சிக்கல் சிங்காரவேலவர் கோவில் குடமுழுக்கு இன்று (புதன்கிழமை) நடக்கிறது. இதையடுத்து குடமுழுக்கு முன்னேற்பாடு பணிகளை அமைச்சர் ரகுபதி நேற்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து சாமி தரிசனத்தை முடித்துவிட்டு நிருபர்களை சந்தித்து பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கில் ஐகோர்ட்டு நீதிபதிகள் தங்களுடைய கண்ணோட்டத்தில் தீர்ப்புகளை வழங்கி உள்ளனர். இரு வேறு பட்ட தீர்ப்புகள் வந்துள்ளது.
நியாயம் கிடைக்கும்
எங்கள் தரப்பில் உள்ள வாதம் நியாயம் என்பதற்கு எடுத்துக்காட்டாக ஒரு நீதிபதியின் தீர்ப்பு அமைந்திருக்கிறது. நிச்சயமாக 3-வது நீதிபதி நியமிக்கப்பட்டு அவர் வழங்கும் தீர்ப்பில் எங்களுக்கு நியாயம் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.
சட்டத்தில் தப்பு செய்தவர்கள் தப்பிக்க முடியாது. நாங்கள் எந்த தப்பும் செய்யவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.