6 வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து கோர்ட்டில் வழக்கு தொடருவோம் - விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பேச்சு

6 வழிச்சாலையை எதிர்த்து கோர்ட்டில் வழக்கு தொடர உள்ளதாக விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் தெரிவித்தார்.

Update: 2022-08-12 08:49 GMT

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே உள்ள தச்சூர் கூட்டு சாலையில் இருந்து ஆந்திர மாநிலம் சித்தூர் வரை ரூ.3 ஆயிரத்து 200 கோடி செலவில் 136 கிலோ மீட்டர் தூரத்திற்கு 6 வழிச்சாலை அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டால் ஊத்துக்கோட்டை தாலுகாவில் 700 ஏக்கர் நிலப்பரப்பில் விளைநிலங்கள், கோவில்கள், அரசு பள்ளி கட்டிடங்கள், 200-க்கும் மேற்பட்ட வீடுகள் பாதிக்கப்படும் சூழ்நிலை உள்ளது.

சுமார் 1,000 ஏக்கர் நிலப்பரப்பில் உள்ள முப்போகம் விளையும் நிலங்கள், நீர்நிலைகள் பாதிப்பு அடையும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. 6 வழிச்சாலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் தொடர் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் ஊத்துக்கோட்டையில் நேற்று விவசாயிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதற்கு விவசாய சங்கத் தலைவர் ஆஞ்சநேயலு தலைமை தாங்கினார். அனைத்திந்திய விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர். பாண்டியன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.

அப்போது அவர் பேசியதாவது:-

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது தச்சூர் - சித்தூர் 6 வழிச்சாலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்தார். ஆனால் அவர் முதல்-அமைச்சர் ஆனதும் இந்த திட்டத்துக்கு ஆதரவாக செயல்படுகிறாரோ என்ற சந்தேகம் எழுகிறது.

மாநிலம் முழுவதும் உரம் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இது தமிழக அரசு கண்டு கொள்ளாதது வேதனை அளிக்கிறது. 6 வழிச்சாலை திட்டத்தை எதிர்த்து கோர்ட்டில் வழக்கு தொடருவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதில் ஊத்துக்கோட்டை தாலுகா விவசாய சங்கத்தை சேர்ந்த காக்கவாக்கம் சசிகுமார், பருத்திமேனிகுப்பம் ரமேஷ் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

6 வழிச்சாலைக்கு எதர்ப்பு தெரிவித்து பள்ளிப்பட்டு தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாநில தமிழ்நாடு விவசாய சங்க செயலாளர் துளசி நாராயணன் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் பெருமாள், மாவட்ட துணைச்செயலாளர் ஜெயச்சந்திரன் உள்பட 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டம் முடிந்த பிறகு அவர்கள் பள்ளிப்பட்டு தாசில்தார் அறை முன்பு தரையில் அமர்ந்து கொண்டு தங்களுக்கு மூன்று போகம் பயிர் செய்யும் நிலங்கள் என்று சான்று சான்று தர வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இது குறித்து சிறிது நேரம் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இத்தகைய சான்று வழங்க இயலாது என்று தாசில்தார் தமயந்தி உறுதியாக தெரிவித்தார். இதையடுத்து விவசாய சங்கத்தினர் நாங்கள் மாவட்ட கலெக்டரை அணுகி கோரிக்கை வைக்கிறோம் என்று கூறி கலைந்து சென்றனர். இந்த பேச்சுவார்த்தையில் ஆர்.கே. பேட்டை இன்ஸ்பெக்டர் ராஜு கலந்து கொண்டார்.

Tags:    

மேலும் செய்திகள்