ஐகோர்ட்டு உத்தரவிட்டும் மாநாட்டிற்கு பாதுகாப்பு அளிக்க தவறிய போலீசார் மீது வழக்கு தொடுப்போம்- ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. பேட்டி

மாநாட்டிற்கு பாதுகாப்பு அளிக்க தவறிய போலீசார் மீது வழக்கு தொடுப்போம் என்று ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. பேசினார்.

Update: 2023-08-22 20:57 GMT


மாநாட்டிற்கு பாதுகாப்பு அளிக்க தவறிய போலீசார் மீது வழக்கு தொடுப்போம் என்று ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. பேசினார்.

20 அண்டாக்கள்

அ.தி.மு.க. மாநாடு நடந்த பகுதியில் மேற்கொள்ளப்படும் தூய்மை பணிகளை ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. நேற்று பார்வையிட்டு ஆலோசனைகள் வழங்கினார். அதன்பின் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

மதுரை அ.தி.மு.க. மாநாடு சரித்திர சாதனை படைத்து இருக்கிறது. மாநாட்டினை கண்டு எதிரிகள் அச்சம் அடைந்து உள்ளனர். சென்னை பொது கூட்டத்தில் எம்.ஜி.ஆருக்கு புரட்சி தலைவர் பட்டம் வழங்கப்பட்டது. ஜெயலலிதாவிற்கு மதுரையில் நடந்த எம்.ஜி.ஆர். மன்ற மாநாட்டில் புரட்சி தலைவி பட்டம் சூட்டப்பட்டது. தற்போது எடப்பாடி பழனிசாமிக்கு, மதுரையில் புரட்சி தமிழர் பட்டம் வழங்கி சிறப்பிக்கப்பட்டு உள்ளது. மதுரை ராசியான மண். இங்கு தொட்டது எல்லாம் துலங்கும். இந்த மாநாடு, வரப்போகும் அ.தி.மு.க. ஆட்சிக்கு அடித்தளம் அமைத்துள்ளது. நாட்டிலேயே ஒரு கட்சி மாநாட்டிற்கு அதிகம் பேர் கூடியிருக்கிறார்கள் என்றால், அது மதுரையில் நடந்த அ.தி.மு.க. மாநாடு தான். மாநாட்டில் எடப்பாடி பழனிசாமியின் பேச்சு, தி.மு.க.வின் பொய்-புரட்டுகளை அம்பலப்படுத்தி உள்ளது. அதிகமான தொண்டர்கள் குவிந்ததால் 2 கவுண்டர்களில் உணவு முற்றிலுமாக தீர்ந்தது. வாகன நிறுத்தம் அருகே இருந்த ஒரு கவுண்டரில் மட்டும் 0.001 சதவீதம் உணவு மட்டுமே வீணானது. 15 லட்சம் பேருக்கு உணவு சமைத்ததில் ஏறத்தாழ அனைத்து உணவுகளும் தீர்ந்து விட்டன. 20 அண்டாக்களில் இருந்த உணவு மட்டுமே மட்டுமே எஞ்சி இருந்தது. அதனை பெரிதுப்படுத்துவது வேடிக்கையாக இருக்கிறது.

பாதுகாப்பு

என்னை பொறுத்தவரை மாநாட்டில் தொண்டர்கள் அனைவரும் சாப்பிட்டார்கள். பசியுடன் யாரும் இல்லை. உணவு பற்றாக்குறையால் தொண்டர்கள் பட்டினி இருந்திருந்தால் தான் வருத்தப்பட்டு இருப்போம். இந்த மாநாடு வெற்றி அடைந்ததை தாங்க முடியாமல், வயிற்று எரிச்சல் கொண்டவர்கள் புளியோதரையை பற்றி பேசி கொண்டு இருக்கிறார்கள். அ.தி.மு.க. மாநாட்டிற்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டு இருந்தது. ஆனால் ஒரு போலீசார் கூட மாநாட்டு திடலில் இல்லை. தேசிய கொடியுடன் வரும் எதிர்க்கட்சி தலைவரான எடப்பாடி பழனிசாமிக்கு கூட போலீஸ் பாதுகாப்பு இல்லை. மதுரையை பற்றி நன்றாக தெரிந்த தென்மண்டல போலீஸ் ஐ.ஜி., டி.ஐ.ஜி. ஆகியோரை மாநாட்டிற்கு ஒரு வாரத்திற்கு முன்பாக வேண்டுமென்றே இடமாற்றம் செய்தார்கள். அரசின் நிர்பந்தத்தால் நீதிமன்ற உத்தரவையும் மீறி போலீசார் பாதுகாப்பு அளிக்கவில்லை. இது குறித்து போலீசார் மற்றும் அரசு மீது வழக்கு அ.தி.மு.க. வக்கீல்கள் தொடுப்பார்கள்.

அ.தி.மு.க எடப்பாடி பழனிசாமியின் தலைமையில் தான் உள்ளது என தேர்தல் ஆணையம் தெரிவித்துவிட்டது. இனியும் எங்களுடன் மற்றவர்களை ஒப்பிட்டு பேசுவது நியாயமாகாது.

இவ்வாறு அவர் கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்