தமிழர்களுக்கு உரிய உரிமை கிடைக்கும் வரை போராடுவோம் - நெல்லையில் சீமான் பேச்சு
தமிழர்களுக்கு உரிய உரிமை கிடைக்கும் வரை நாங்கள் போராடுவோம் என்று நெல்லையில் சீமான் கூறினார்.
நெல்லை,
தமிழ்த்தேசியத் தன்னுரிமைக்கட்சியின் சார்பில் பாளையங்கோட்டையில் "தமிழக மக்கள் தன்னாட்சி" மாநாடு இன்று நடந்தது. கட்சியின் தலைவர் அ.வியனரசு தலைமை தாங்கினார். மாநில பொருளாளர் தங்கராசு கொடியேற்றினார்.
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
தன்னுரிமை என்பது தமிழர்களின் உரிமை தான். உரிமையை இழந்ததால் தான் தன்னூரிமைப்பற்றி பேசுகிறோம். உயிரை இழக்கலாம். ஆனால் உரிமை இழக்கக்கூடாது. எந்த இனம் தனது உரிமையை இழக்கிறதோ? அந்த இனம் அழிந்து போய்விடும் எனவே உரிமை இழக்கக்கூடாது. நம் உரிமை இழந்து வருவதால் தான் பலரும் நமது நாட்டில் உரிமை கொண்டாடி வருகிறார்கள்.
தமிழ்நாட்டில் ரூ. 6 லட்சம் கோடி அரசுக்கு கடன் உள்ளது. இந்த நேரத்தில் ரூ.80 கோடியில் பேனா வைக்க திட்டமிட்டுள்ளனர். இதை நாங்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமாட்டோம். முன்பு உறங்கிக் கொண்டிருந்தோம். தற்போது விழித்து விட்டோம் இதை வைக்கவிடமாட்டோம்.
நமது வரலாற்றைப் படிக்க வேண்டும். வரலாற்றைப் படைக்க வேண்டும். வரலாறாய் வாழ வேண்டும். அறிவை கடன் கொடுத்தவன் தமிழன், அப்படிப்பட்ட தமிழ் என்று தமிழனின் பெருமையை பாராட்டுவார்கள்.
இலங்கையில் ஆட்சி அதிகாரம் யாரிடமும் இல்லை, இருந்தாலும் சிங்களர்கள் இன்னும் தமிழக மீனவர்களை எல்லை தாண்டி வந்து விட்டதாக கைது செய்கிறார்கள். ஆனால் ஒரு கேரளா மீனவர்களை கூட அவர்களால் கைது செய்ய முடியாது. அந்த அளவிற்கு நமது நாட்டை திராவிட ஆட்சி அழித்து வைத்துள்ளது.
இந்த ஆட்சியில் காடுகள் அழிக்கப்படுகிறது. அதை தடுக்க வேண்டும். பச்சைப் புரட்சி பசுமை திட்டம் என்று கொண்டு வந்து மரம் வைத்து வளர்த்து விட முடியும் எங்களால்.
10 மரக்கன்று நட்டு வளர்த்தால் மாணவர்களுக்கு தேர்வில் 10 மதிப்பெண் வழங்கப்படும் என்றும்,100 மரம் நட்டு வளர்த்தால் தன்னுரிமை வழங்கப்படும் என்றும், 1000 மரம் நட்டு வளர்த்தால் வேலை உரிமை வழங்கப்படும் என்று அறிவித்தால் எல்லோரும் மரத்தை வளர்த்து சோலை ஆக்கி விடுவார்கள்.
காமராஜர் கல்வி நிலையங்களைத் திறந்து மக்களை படிக்க வைத்தார். திராவிட ஆட்சியாளர்கள் மது கடைகளை திறந்து குடிக்க வைத்த உள்ளனர். அந்த அளவிற்கு மோசமாக மாறிவிட்டது. நாட்டில் கஞ்சா, போதை பொருள் விற்பனை அதிகரித்துவிட்டது. போலீஸ் நிலையத்தில் வைத்து இந்த ஆட்சியில் 9 மரணம் நடந்துள்ளது. அந்த அளவிற்கு ஆட்சி மோசமாக உள்ளது.
மத்திய அரசு நாம் வழங்குகின்ற சரக்கு சேவைவரியை வைத்து தனியாருக்கு மின்சாரம் தயாரிப்பதற்கு தொழில் செய்வதற்கு அனுமதி வழங்கி உள்ளது. மின்சாரம் தனியாரிடம் வாங்குவதனால் தான் மின் கட்டணம் உயர்கிறது. காற்றாலை, சூரியஒளியில் மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தை ஊக்கப்படுத்த வேண்டும்.
இந்த 8 ஆண்டு ஆட்சியில் பிரதமர் மோடி எதுவும் சாதிக்கவில்லை. நாங்கள் சமநீதி, தனி அதிகாரம் கேட்கின்றோம். தமிழர்களுக்கு உரிய அனைத்து உரிமை கிடைக்கும் வரை நாங்கள் போராடுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.