குறுக்குவழியில் அதிமுகவை அபகரிக்கும் முயற்சியை வீழ்த்துவோம் - எம்ஜிஆர் நினைவிடத்தில் ஓபிஎஸ் தரப்பு உறுதிமொழி

எம்ஜிஆர் நினைவிடத்தில் குறுக்குவழியில் அதிமுகவை அபகரிக்கும் முயற்சியை வீழ்த்துவோம் என்று ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் உறுதிமொழி ஏற்கப்பட்டது.

Update: 2022-12-24 07:18 GMT

சென்னை,

மறைந்த தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆரின் 35-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி தமிழகம் முழுவதும் அதிமுக தொண்டர்கள் அவரது படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தினார்கள்.

சென்னை மெரினா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் அரசியல் கட்சி தலைவர்கள், தொண்டர்கள் அஞ்சலி செலுத்துவதற்காக சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அவரது நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. அங்கு முன்னதாக அதிமுக இடைக்கால பொதுச்செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

இந்த நிலையில் தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அவரது அணியினர் வந்து எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர். அவருடன் முன்னாள் அமைச்சர்கள் வைத்தியலிங்கம், கு.ப.கிருஷ்ணன், வெல்லமண்டி நடராஜன், மற்றும் ஜே.சி.டி.பிரபாகர், புகழேந்தி, மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ. மகிழன்பன், டாக்டர்.சதீஷ், கொளத்தூர் கிருஷ்ண மூர்த்தி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

பின்னர் அங்கு உள்ள மேடையில் அவரது ஆதரவாளர்கள் மத்தியில் உறுதிமொழி எடுத்தார். அவரை வரவேற்று தொண்டர்கள் கோஷமிட்டனர். அதிமுகவை ஒருங்கிணைக்க வேண்டும். வருகிற நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக 40 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும். திமுகவை ஆட்சிக் கட்டிலில் இருந்து இறக்க வேண்டும் என்பது போன்ற வாசகங்கள் அந்த உறுதிமொழியில் இடம்பெற்றிருந்தது.

மேலும் தொண்டர்கள் இயக்கமான அதிமுகவை தன்வசமாக்க நினைக்கும் துரோகிகளை வீழ்த்துவோம் என்றும் சட்டவிரோத பொதுக்குழு மூலம் குறுக்குவழியில் அதிமுகவை அபகரிக்கும் முயற்சியை வீழ்த்துவோம் என்றும் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் உறுதிமொழி ஏற்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்