எங்களுக்கும் எல்லா அரசியலும் தெரியும்: தி.மு.க.வை சீண்டி பார்க்க வேண்டாம் -முதல்-அமைச்சர் எச்சரிக்கை

எங்களுக்கும் எல்லா அரசியலும் தெரியும், தி.மு.க.வை சீண்டி பார்க்க வேண்டாம் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Update: 2023-06-16 00:26 GMT

சென்னை,

தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டு உள்ளார்.

மத்திய பா.ஜனதா அரசின் தூண்டுதலால்தான் அமைச்சர் கைது செய்யப்பட்டு உள்ளார் என தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி கண்டனம் தெரிவித்து வருகின்றன.

வீடியோ பதிவு

பரபரப்பான இந்த அரசியல் சூழ்நிலையில், தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின், சமூக வலைதளப் பக்கங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார்.

அந்த வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது:-

அரசியல் பழிவாங்கும் செயல்

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு அமலாக்கத்துறை மூலமாக கொடுக்கப்படுகிற அநியாயமான தொல்லைகள் எல்லாம் உங்களுக்கு நன்றாகத் தெரியும். இது அப்பட்டமான அரசியல் பழிவாங்கும் செயல் என்பதில் யாருக்கும் கொஞ்சமும் சந்தேகமில்லை.

10 ஆண்டுக்கு முன்னர் உள்ள பழைய புகாரை வைத்து, 18 மணி நேரம் அடைத்து வைத்து, மன அழுத்தம் கொடுத்து, மனரீதியாகவும் - உடல் ரீதியாகவும் பலவீனப்படுத்தி, உயிருக்கு ஆபத்து ஏற்படும் வகையில் இதயநோயை உருவாக்கி இருக்கிறார்கள் என்றால், இதைவிட அப்பட்டமான அரசியல் பழிவாங்கல் இருக்க முடியுமா?.

சந்திக்க அனுமதி இல்லை

செந்தில் பாலாஜி மேல் புகார் இருக்கும் என்றால், அது தொடர்பாக நீதிமன்றத் தீர்ப்பு இருக்கும் என்றால், அவரை அழைத்து விசாரணை நடத்துவதை நான் தவறு என்று சொல்லவில்லை. ஓடி ஒளியக் கூடிய அளவுக்கு அவர் சாதாரணமானவர் இல்லை. அவர், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர். அதுவும் 5 முறை சட்டமன்ற உறுப்பினராக இருக்கிறார். அதுவும் 2-வது முறையாக அமைச்சராக இருக்கிறார். நாள்தோறும் பொதுநிகழ்ச்சிகளில் கலந்து கொள்பவர். அப்படிப்பட்டவரை, ஏதோ பயங்கரவாதியைப் போல அடைத்து வைத்து விசாரிக்க என்ன அவசியம் இருக்கிறது?.

அமலாக்கத்துறை அதிகாரிகள் வந்தபோது, முழு ஒத்துழைப்பு தந்தார். எந்த ஆவணங்களை எடுத்திருந்தாலும், அது தொடர்பாக விளக்கமளிக்கத் தயார் என்று சொல்லி இருந்தார். அதற்குப் பிறகும் 18 மணி நேரமாக அடைத்து வைத்துள்ளனர். யாரையும் சந்திக்க அனுமதி இல்லை. இறுதியாக அவருக்கு உடல்நலம் முழுமையாக பாதிக்கப்பட்டு இதயவலி அதிகமான பின்னர்தான், அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

அமலாக்கத்துறை மூலம் அரசியல்

அதிலும் அலட்சியம் காட்டி இருந்தார்கள் என்றால், அது அவருடைய உயிருக்கே ஆபத்தாகி இருக்கும். இப்படி ஒரு விசாரணையை மேற்கொள்ளும் அளவுக்கு அப்படி என்ன அவசரம்? அறிவிக்கப்படாத 'எமர்ஜென்சி'யில் நாடு இருக்கிறதா? அப்படித்தான் இருக்கிறது, அமலாக்கத்துறையின் நடவடிக்கை.

எளிமையாக சொல்ல வேண்டும் என்றால், பா.ஜ.க. தலைமை, அமலாக்கத்துறை மூலமாக அவர்களது அரசியலைச் செய்ய நினைக்கிறது. மக்களைச் சந்தித்து அரசியல் செய்ய பா.ஜ.க. தயாராக இல்லை. பா.ஜ.க.வை நம்ப மக்களும் தயாராக இல்லை. மக்களுக்கான அரசியலை செய்தால்தான் மக்கள் பா.ஜ.க.வை நம்புவார்கள். பா.ஜ.க.வின் அரசியலே மக்கள் விரோத அரசியல்தான்.

ஜனநாயக விரோத பாணி

கருத்தியல் ரீதியாக, அரசியல் ரீதியாக, தேர்தல் களத்தில் எதிர்கொள்ள முடியாதவர்களை வருமான வரித்துறை, அமலாக்கத் துறை, சி.பி.ஐ. என விசாரணை அமைப்புகளை வைத்து மிரட்டுவது பா.ஜ.க.வின் பாணி. அதுதான் அவர்களுக்கு தெரிந்த ஒரே பாணி. இந்த ஜனநாயக விரோத பாணியைத்தான் இந்தியா முழுமைக்கும் அவர்கள் பின்பற்றி வருகின்றனர். ஒரே 'ஸ்கிரிப்ட்'டைத்தான் வேறு வேறு மாநிலங்களில் 'டப்பிங்' செய்து வருகிறார்கள்.

ஆனால், உத்தரபிரதேசத்தில் மத்தியபிரதேசத்தில், குஜராத்தில் எல்லாம் சோதனை நடத்தப்படாது. ஏனென்றால், அங்கே எல்லாம் ஆட்சியில் இருப்பது பா.ஜ.க. அந்த மாநிலங்கள் எல்லாம் வருமான வரித்துறைக்கோ, அமலாக்கத் துறைக்கோ, மத்தியப் புலனாய்வுத் துறைக்கோ தெரியாது.

3 ஆயிரம் சோதனைகள்

பா.ஜ.க. ஆட்சிக்கு வருவதற்கு முன்னர், முந்தைய 10 ஆண்டுகளில் அமலாக்கத்துறை நடத்திய மொத்த சோதனைகளின் எண்ணிக்கை 112தான். ஆனால், பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த பின்னர், பா.ஜ.க.வின் எதிர்க்கட்சிக்காரர்களின் இடங்களில் மட்டும் 3 ஆயிரம் சோதனைகளை நடத்தி இருக்கிறார்கள். இதில் குற்றம் நிரூபிக்கப்பட்டது என்னவோ வெறும் 0.05 சதவீதம்தான். மற்றபடி எல்லா சோதனைகளும் மிரட்டல், அரட்டல், உருட்டல்தான்.

ஜெயலலிதாவுடைய மறைவுக்குப் பிறகு அ.தி.மு.க.வைத் தங்களின் கொத்தடிமைக் கூடாரமாக ஆக்குவதற்கு அமலாக்கத்துறையையும், சி.பி.ஐ.யையும், வருமான வரித்துறையையும் பயன்படுத்தியது பா.ஜ.க. அவர்களும் பயந்துபோய் பா.ஜ.க.வின் காலடியில் கிடக்கிறார்கள். இப்படிப்பட்ட எடப்பாடி பழனிசாமி, செந்தில் பாலாஜியைப் பற்றி குறை சொல்கிறார். அவருக்கு ஊழல் பற்றிப் பேச எந்த அருகதையும் இல்லை.

மற்ற கட்சி மாதிரி தி.மு.க. கிடையாது

இந்த எடப்பாடி பழனிசாமி அடிமை கும்பல் மாதிரி மற்ற கட்சிகளையும் நினைக்கிறது பா.ஜ.க. தலைமை. அது நினைக்கிற மாதிரியான கட்சி இல்லை தி.மு.க. உருட்டல் மிரட்டலுக்கெல்லாம் பயப்படுபவர்கள் இல்லைதி.மு.க.காரர்கள். சுவரில் அடித்த பந்து திரும்ப வந்து முகத்தில் அடிக்கிற மாதிரிதான் ஒவ்வொரு தி.மு.க. காரனும் வளர்க்கப்பட்டிருக்கிறான்.

எல்லாவற்றையும் பார்த்தவர்கள் நாங்கள். எங்களுக்கு என்று தனித்த அரசியல் கொள்கை கோட்பாடுகள் இருக்கின்றன. மதவாதம் சாதியவாதம், சனாதனம், பிறப்பால் உயர்வு தாழ்வு, மேல் - கீழ், இந்த மாதிரியான மனித சமுதாயத்துக்கு விரோதமான பிற்போக்கு எண்ணங்களுக்கு எதிரானவர்கள் நாங்கள். இந்த சக்திகளை அரசியல் களத்தில் எதிர்கொள்வதுதான் எங்களின் வழக்கம். வாதங்களுக்கு வாதங்கள் வைக்க தயாராக இருக்கிறோம். அதை விடுத்து, மிரட்டி பணிய வைக்க நினைத்தால், குனிய மாட்டோம். நிமிர்ந்து நிற்போம். நேருக்கு நேர் சந்திப்போம்.

தி.மு.க.வின் வரலாறே சாட்சி

நாங்கள் ஆட்சிக்காக மட்டும் கட்சி நடத்துபவர்கள் இல்லை. நாங்கள் கொள்கைக்காக கட்சி நடத்துகிறவர்கள். கொள்கைகளைக் காப்பாற்றத்தான் கடைசி வரைக்கும் போராடுவோம். தி.மு.க.வின் வரலாறே இதற்கு சாட்சி. தி.மு.க. நடத்திய போராட்டங்கள் எப்படிப்பட்டது என்று வரலாற்றைப் புரட்டிப் பாருங்கள். இல்லை என்றால் டெல்லியில் இருக்கும் மூத்த தலைவர்களைக் கேட்டுப் பாருங்கள். சீண்டிப் பார்க்காதீர்கள். தி.மு.க.வையோ, தி.மு.க.காரனையோ சீண்டிப் பார்த்தால் தாங்க மாட்டீர்கள். எங்களுக்கும் எல்லா அரசியலும் தெரியும். இது மிரட்டல் அல்ல, எச்சரிக்கை.

எனவே, பொறுப்புள்ள மத்திய அரசாங்கத்தை ஆள்கிற பொறுப்பில் இருக்கும் பா.ஜ.க., அந்தப் பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும். எதேச்சாதிகார நடவடிக்கைகளை இனியாவது நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். தொண்டர்களுக்காக நான் இருக்கிறேன். எனக்காக நீங்கள் இருக்கிறீர்கள். 2024 நமக்கான தேர்தல் களம் காத்துக் கொண்டிருக்கிறது. அதில் நாம் இவர்களைச் சந்திப்போம்.

பெரியார், அண்ணா, தலைவர் கருணாநிதி தந்த உள்ளவுறுதி நமக்கு இருக்கிறது. எதையும் தாங்கும் இதயம் உண்டு. இதையும் தாங்கிக் கடந்து செல்வோம். நாற்பதிலும் வெல்வோம்.

இவ்வாறு அவர் பேசியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்