ஆங்கிலேயர்களின் ஆதிக்க சிந்தனை இன்னும் நம்மிடம் இருக்கிறது: கவர்னர் பரபரப்பு பேச்சு
ஆங்கிலேயர்கள் நம்மை விட்டு வெளியே சென்றாலும் அவர்களின் ஆதிக்க சிந்தனை இன்னும் நம்மிடம் இருந்து கொண்டு தான் உள்ளது என்று கவர்னர் ஆர்.என்.ரவி பேசினார்.
திருச்சி,
பாரதியாரின் பிறந்தநாளை தேசிய மொழிகள் தினமாகவும், ராமலிங்க வள்ளலாரின் 200-வது ஜெயந்தி, சுதந்திரம் பெற்று 75-வது ஆண்டு நிறைவு ஆகியவை முப்பெரும் விழாவாக திருச்சியில் உள்ள தேசியக் கல்லூரியில் நேற்று கொண்டாடப்பட்டது.
இதையொட்டி 'இந்திய விடுதலைப்போரில் தென்னிந்திய மொழிகளின் பங்களிப்பு' என்ற தலைப்பில் கருத்தரங்கமும் நடைபெற்றது. மாலையில் நடைபெற்ற நிறைவு விழாவில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றி பேசும்போது கூறியதாவது:-
சுதந்திர போராட்டம்
சுதந்திர போராட்டத்தின்போது தென்னிந்திய மொழிகளின் பங்கு என்கிற தலைப்பில் விவாதம் கண்டிப்பாக தேவையான ஒன்று. நாட்டின் எல்லா பகுதிகளில் இருந்தும் மக்கள் சுதந்திர போராட்டத்தில் கலந்து கொண்டனர். அப்போது, அந்தந்த பகுதிகளில் உள்ள மாநில மொழிகளில் மக்களிடம் தகவல்களை பரிமாற்றம் செய்து கொள்வது மிக முக்கியமாக பார்க்கப்பட்டது.
சுதந்திர போராட்டத்தின் முக்கிய அம்சங்கள் குறித்து நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.
சொந்தம் கொண்டாட முடியாது
சுதந்திரப் போராட்டத்தின்போது இந்திய தேசிய காங்கிரஸ் மட்டுமே போராடியதாக கூறிக்கொண்டு இருக்கிறார்கள். அவர்கள் மட்டுமே அதை சொந்தம் கொண்டாட முடியாது. அனைவருமே போராடினார்கள் என்பதே உண்மை.
நம் கிராமங்களில் பக்கத்து தெருவில் கூட சுதந்திரப் போராட்ட காலகட்டத்தில் முக்கிய பங்கு வகித்தவர்கள் இருந்திருக்கலாம். அதனை ஆய்வு செய்யும் மாணவர்கள் தேடி கண்டறிய வேண்டும். ஆங்கிலேயர்கள் நம்மை விட்டு வெளியே சென்றாலும் அவர்களின் ஆதிக்க சிந்தனை இன்னும் நம்மிடம் இருந்து கொண்டு தான் உள்ளது.
முழுமையாக ஆவணப்படுத்த வேண்டும்
நம் மக்களின் அடையாளத்தை, கலாசாரத்தை ஆங்கிலேய அரசாங்கம் முழுவதுமாக அழிக்க நினைத்தனர். சுதந்திர போராட்டத்தில் கலந்து கொண்ட அனைவரும் சுதந்திர போராட்ட வரலாற்றில் இடம் பெற்றுள்ளனரா என்றால் கண்டிப்பாக இல்லை. தமிழகத்தில் நான் சுதந்திர போராட்ட வீரர்களின் பட்டியலை பார்த்தபோது 30 பேரை கூட நான் அதில் பார்க்கவில்லை.
ஆனால் பாளையங்கோட்டை மற்றும் வேலூரில் நடந்த போராட்டங்களில் மட்டுமே ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தங்களது உயிரை கொடுத்துள்ளனர்.
ஒவ்வொரு கிராமங்களிலும் மக்கள் சுதந்திரத்திற்காக தங்களின் பங்களிப்பை மட்டும் அல்ல தங்களிடம் இருந்த பலவற்றை கொடுத்துள்ளனர். சுதந்திர போராட்ட காலகட்டத்தில் போராடிய அனைவரையும் நாம் முழுமையாக ஆவணப்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.