வேதநகரில் பர்தா அணிந்து வந்து 20 பவுன் நகை கொள்ளை:வீட்டை 15 நாட்களாக நோட்டமிட்டு கைவரிசை காட்டினோம் கைதானவர் பரபரப்பு வாக்குமூலம்
நாகர்கோவில் வேதநகரில் கொள்ளை நடந்த வீட்டை 15 நாட்களாக நோட்டமிட்டு கைவரிசை காட்டினோம் என்று கைதானவர் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார்.;
நாகர்கோவில்:
நாகர்கோவில் வேதநகரில் கொள்ளை நடந்த வீட்டை 15 நாட்களாக நோட்டமிட்டு கைவரிசை காட்டினோம் என்று கைதானவர் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
20 பவுன் நகை கொள்ளை
நாகர்கோவில் வேதநகர் மேலப்புதுத் தெருவை சோ்ந்தவர் முகமது உமர் சாகிப் (வயது 53). வெளிநாட்டில் டிரைவர் வேலை செய்து வந்த இவர், தற்போது சொந்த ஊரில் வசித்து வருகிறார். சம்பவத்தன்று முகமது உமர் சாகிப் வீட்டுக்குள் பர்தா அணிந்து வந்த மர்ம கும்பல் அவரை கட்டிப்போட்டு வீட்டில் இருந்த 20 பவுன் நகையை கொள்ளை அடித்தது. அப்போது ஆஸ்பத்திரிக்கு சென்ற முகமது உமர் சாகிப்பின் மனைவி ஜாஸ்மின் மற்றும் மகள் வீட்டுக்கு வரவே கொள்ளை கும்பல் பொம்மை துப்பாக்கியை காட்டி மிரட்டி காரில் தப்பிச்செல்ல முயன்றது.
எனினும் அக்கம் பக்கத்தினர் திரண்டு காரை மடக்கி கொள்ளை கும்பலை சேர்ந்த ஒருவரை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். அதைத் தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் பிடிபட்டவர் இடலாக்குடி பரசுராம் தெருவை சேர்ந்த ரகீம் (33) என்பது தெரியவந்தது. மேலும் தப்பிச் சென்றது அழகியபாண்டியபுரம் எட்டாமடையை சேர்ந்த கவுரி (36), இடலாக்குடி வயல் தெருவை சேர்ந்த அமீர், கோட்டார் மேலச் சரக்கல்விளைய சேர்ந்த தர்வேஷ் மீரான் (40), கோவில்பட்டியை சேர்ந்த சாா்லஸ், இருளப்பபுரத்தை சேர்ந்த ஷேக் மீரான் (32), இவருடைய அண்ணன் முகமது மைதீன் புகாரி (34) என்பதும் தெரியவந்தது. அதைத் தொடர்ந்து கவுரி, அமீர் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்துனர். ஷேக் மீரான், முகமது மைதீன் புகாரி மற்றும் தர்வேஷ் மீரான் ஆகியோர் நாகர்கோவில் 2-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் சரணடைந்தனர். அவர்களை போலீசார் ஒரு நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர்.
15 நாட்களாக...
இதற்கிடையே தலைமறைவாக இருந்த சார்லஸ் நேற்று முன்தினம் போலீசில் சிக்கினார். அவரை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தினர்.
அப்போது கொள்ளை நடந்த வீட்டை 15 நாட்களாக நோட்டமிட்டு கைவரிசை காட்டினோம். சம்பவத்தன்று காலையில் வேறு ஒரு வீட்டில் கொள்ளையடிக்க முயன்றபோது அது பலிக்காததால், இரவில் முகமது உமர் சாகிப் வீட்டில் கொள்ளையை அரங்கேற்றினோம் என்று சார்லஸ் வாக்குமூலம் கொடுத்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டார்.