கஷ்டப்பட்டு விளைவிக்கிறோம்... நஷ்டப்பட்டு தவிக்கிறோம்!

விளை பொருட்கள் நல்ல விலைக்கு போனால் மட்டுமே விவசாயிகளுக்கு நிம்மதி கிடைக்கும். இதுதொடர்பாக தேனி மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் சிலர் கூறிய கருத்துகள் வருமாறு:-

Update: 2023-03-09 19:00 GMT

'உழுதவன் கணக்குப் பார்த்தால் உழக்குகூட மிஞ்சாது' என்பார்கள். உழவுப் பணியில் இருந்து அறுவடை வரை மட்டுமல்ல, அறுவடைக்கு பின்னர் சந்தைக்கு கொண்டு செல்வது வரை விவசாயிகளுக்கு செலவு இருக்கிறது. விளை பொருட்கள் நல்ல விலைக்கு போனால் மட்டுமே விவசாயிகளுக்கு நிம்மதி கிடைக்கும்.

காய்கறி சாகுபடி

நல்ல விலை என்பது, ஒட்டுமொத்த உற்பத்திச் செலவோடு, விவசாயிகளின் உழைப்புக்கு ஏற்ற ஊதியம் ஆகியவற்றை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். சிறு, குறு விவசாயிகள் அப்படி கணக்குப் போட்டுப் பார்த்தால், ஊதியம் என்பது மிகச் சொற்பமாக தான் அமையும். ஆனாலும், விவசாயிகள் அடுத்த பருவ சாகுபடிக்கு ஆயத்தமாகி விடுவார்கள்.

ஒவ்வொரு ஆண்டும் விளைச்சல் அதிகரிக்கும் போது விலை கடும் வீழ்ச்சி அடைவது விவசாயிகளுக்கு கவலை அளிப்பதாக இருக்கிறது. பார்க்கும் இடமெங்கும் விவசாயம் நடக்கும் தேனி மாவட்டத்திலும் விவசாயிகளுக்கு பாதிப்புகள் தொடர் கதையாகவே இருக்கிறது.

தேனி மாவட்டத்தில் சுமார் 24 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் காய்கறி சாகுபடி செய்யப்படுகிறது. அதிகபட்சமாக முருங்கைக்காய் 9,300 ஏக்கர் பரப்பளவிலும், வெங்காயம் 4 ஆயிரம் ஏக்கர் பரப்பளவிலும், தக்காளி 3,700 ஏக்கர் பரப்பளவிலும் சாகுபடியாகிறது. அதுபோல், கத்தரிக்காய் 1,800 ஏக்கர், காலி பிளவர் சுமார் 1,000 ஏக்கர், முட்டைக்கோஸ் சுமார் 500 ஏக்கர் பரப்பளவிலும், பாகற்காய், புடலங்காய், கோவக்காய், பீர்க்கங்காய் போன்ற பந்தல் காய்கறிகள் சுமார் 2 ஆயிரம் ஏக்கர் பரப்பளவிலும் சாகுபடி செய்யப்படுகிறது.

விலை வீழ்ச்சி

மாவட்டத்தில் ஆண்டுக்கு சுமார் 1 லட்சம் டன் காய்கறிகள் சாகுபடி செய்யப்படுகின்றன. அவற்றில் 10 சதவீதம் மட்டுமே உள்ளூர் சந்தைகளில் விற்பனையாகிறது. சுமார் 30 சதவீதம் காய்கறிகள் கேரள மாநிலத்துக்கும், மற்ற காய்கறிகள் மதுரை, ஒட்டன்சத்திரம், சென்னை ஆகிய பகுதிகளுக்கும் கொண்டு செல்லப்படுகின்றன.

மாவட்டத்தில் காய்கறிகள் விளைச்சல் குறையும் காலங்களில் விலை உயர்ந்து காணப்படுகிறது. குறிப்பாக தக்காளி, வெங்காயம் விலை உயரும் போது, கர்நாடகா, ஆந்திரா பகுதிகளில் இருந்து அவை கொண்டு வந்து விற்பனை செய்யப்படுகிறது. அதே நேரத்தில் விளைச்சல் அதிகரிக்கும் போது, இங்கிருந்து பிற மாநிலங்களுக்கு கொண்டு சென்று சந்தைப்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறைவாகவே காணப்படுகின்றன. இதனால், அதிக விளைச்சல் அடைந்த காய்கறிகள் விலையின்றி வீணாகும் அவலம் நீடிக்கிறது.

தக்காளி பழங்களை சில நாட்களுக்கு மேல் இருப்பு வைத்து விற்பனை செய்ய முடியாது என்பதால் விலை கிடைக்காத நாட்களில் அவை சாலையோரமும், குப்பைகளிலும் வீசப்படுகின்றன. பார்த்துப் பார்த்து விளைவித்த காய்கறிகளுக்கு விலை கிடைக்காததால், மனதை கல்லாக்கிக் கொண்டு குப்பையில் வீசும் மனநிலைக்கு விவசாயிகள் தள்ளப்படுவது என்பது பேரவலம் என்றே கூறலாம்.

இதுதொடர்பாக தேனி மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் சிலர் கூறிய கருத்துகள் வருமாறு:-

அதிக நஷ்டம்

பொன்னன்படுகையை சேர்ந்த விவசாயி காளீஸ்வரன் கூறும்போது, 'நான் 1.5 ஏக்கர் பரப்பளவில் காலிபிளவர் சாகுபடி செய்து வருகிறேன். சுமார் 1,200 மூட்டை காலிபிளவர் பூக்கள் கிடைக்கும். உழவுப்பணி முதல் அறுவடை வரை ரூ.60 ஆயிரம் செலவாகிறது. அறுவடை செய்து, ஏற்றுக்கூலி, இறக்குக்கூலி, மார்க்கெட்டுக்கு எடுத்துச் செல்லும் வண்டி வாடகை என ஒரு மூட்டைக்கு ரூ.70 செலவு ஆகிறது. கடந்த மாதம் 20 பூக்கள் கொண்ட ஒரு மூட்டை ரூ.350 வரை விற்பனை செய்யப்பட்டது. தற்போது விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. ஒரு மூட்டை ரூ.50-க்கு தான் வாங்கப்படுகிறது. இதனால், அறுவடைக்கு பிந்தய செலவினத்துக்கு கூட வருவாய் கிடைப்பது இல்லை. பெரும் நஷ்டம் ஏற்படுகிறது. மக்கள் விரும்பி சாப்பிடும் காலிபிளவரை உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு சரியான விலை கிடைக்கவில்லை. கஷ்டப்பட்டு விளைவித்தாலும் அறுவடை நேரத்தில் விலை இன்றி அதிக நஷ்டத்தை கொடுக்கிறது' என்றார்.

கட்டுப்படியாகும் விலை

எரசக்கநாயக்கனூரை சேர்ந்த விவசாயி ராஜேந்திரன் கூறும்போது, 'தக்காளி, வெங்காயம் சாகுபடி செய்யும் விவசாயிகள் விளைச்சல் அதிகரிக்கும் போது விலையின்றி பாதிக்கப்படுகிறோம். சின்னவெங்காயம் விலை தற்போது வீழ்ச்சி அடைந்துள்ளது. சந்தையில் ரூ.20 முதல் ரூ.25 வரை விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் விவசாயிகளிடம் இருந்து ரூ.5 முதல் ரூ.10 வரை கொள்முதல் செய்யப்படுகிறது. இது, அறுவடை மற்றும் போக்குவரத்து செலவுக்கு கூட போதுமானதாக இல்லை. மாவட்டத்தில் சாகுபடி குறைவாக இருக்கும் போது விலை அதிகரித்து காணப்படுகிறது. எனவே, வெங்காயத்துக்கு கட்டுப்படியாகும் வகையில் விலை நிர்ணயம் செய்து, விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படாமல் தடுக்க வேண்டும்' என்றார்.

முருங்கை சாகுபடி

பள்ளப்பட்டியை சேர்ந்த விவசாயி பெருமாள்சாமி கூறும்போது, 'முருங்கைக்காய் தற்போது நல்ல விலைக்கு போகிறது. இப்போது தான் விளைச்சல் தொடங்கி இருக்கிறது. ஒரு கிலோ ரூ.70 முதல் ரூ.80 வரை விவசாயிகளிடம் இருந்து வியாபாரிகளால் வாங்கப்படுகிறது. விளைச்சல் அதிகரிக்கும் போது இதன் விலை குறையும். கடந்த ஆண்டு நல்ல விளைச்சல் இருந்த போது ஒரு கிலோ 50 பைசாவுக்கு கொள்முதல் செய்யப்பட்டது. இது வாகன வாடகைக்கு கூட போதுமானதாக இல்லை. சீசன் தொடங்கும் காலத்தில் போதிய விலை கிடைக்கும். ஆனால், எங்கள் பகுதியில் கற்குவாரி செயல்படுவதால் இரவு, பகலாக வெடி வைத்து பாறைகள் தகர்க்கப்படுகின்றன. இதனால், ஏற்படும் அதிர்வால் பூக்கள் உதிர்ந்து விடுகின்றன. மேலும், ஆழ்குழாய் கிணற்றிலும் பாதிப்பு ஏற்பட்டு தண்ணீர் தட்டுப்பாடு உருவாகி உள்ளது. எனவே, விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் கற்குவாரிகள் செயல்பட அனுமதிக்கக்கூடாது. தேங்காய் விலையும் தற்போது சரிந்துள்ளது. விற்பனையாகும் விலை வெட்டுக்கூலிக்கு கூட போதவில்லை' என்றார்.

மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள்

உப்புக்கோட்டையை சேர்ந்த விவசாயி பாண்டி கூறும்போது, 'நான் தக்காளி சாகுபடி செய்து வருகிறேன். தற்போது 12 கிலோ கொண்ட ஒரு பெட்டி தக்காளி ரூ.70 முதல் ரூ.100 வரை விற்பனை செய்யப்படுகிறது. அதில் வண்டி வாடகை, பெட்டி வாடகை, மார்க்கெட் ஏலம் கமிஷன் போக, ஒரு கிலோவுக்கு ரூ.3 முதல் ரூ.4 வரை தான் கிடைக்கிறது. அது சாகுபடி செலவுக்கு கூட போதுமானதாக இல்லை. விலை உயர்வாக இருக்கும் போது வெளி மாநிலங்களில் இருந்து தக்காளி இறக்குமதி செய்யப்படுகின்றன. அதுபோல், விலை வீழ்ச்சி அடையும் போது விலை கிடைக்கும் மாவட்டங்களுக்கு இங்கிருந்து அனுப்பி வைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். தக்காளியில் இருந்து மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிப்புக்கான தொழிற்கூடங்களை தேனி மாவட்டத்தில் அரசு உருவாக்க வேண்டும்' என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்