நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற ஒற்றுமையாக செயல்பட வேண்டும்

நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என்று ஒருங்கிைணந்த கோவை மாவட்ட தி.மு.க. நிர்வாகிகள் கூட்டத்தில் அமைச்சர் சு.முத்துசாமி பேசினார்.

Update: 2023-07-08 18:45 GMT
கோவை


நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என்று ஒருங்கிைணந்த கோவை மாவட்ட தி.மு.க. நிர்வாகிகள் கூட்டத்தில் அமைச்சர் சு.முத்துசாமி பேசினார்.


தி.மு.க. நிர்வாகிகள் கூட்டம்


கோவை ஒருங்கிணைந்த மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம் கோவை வரதராஜபுரத்தில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் நடந்தது. மாவட்ட செயலாளர்கள் நா.கார்த்திக், தொண்டா முத்தூர் ரவி, தளபதி முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் தமிழக வீட்டுவசதி, நகர்ப்புற மற்றும் மதுவிலக்கு ஆயத் தீர்வை துறை அமைச்சரும், கோவை மாவட்ட பொறுப்பு அமைச் சருமான சு.முத்துசாமி தலைமை தாங்கி கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் கூறியதாவது:-


நாடாளுமன்ற தேர்தல்


ஈரோடு இடைத்தேர்தல் வெற்றிக்கு கோவையை சேர்ந்தவர்கள் தான் முக்கிய காரணமாக இருந்தார்கள். அமைச்சர் செந்தில்பாலாஜி என்ன திட்டத்தை வகுத்து கொடுத்தாரோ அதே பாணியில் தொய்வில்லாமல் நான் செய்வேன். நாடு முழுவதும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நல்ல பெயர் இருக்கிறது.


நமக்குள் பல்வேறு பிரச்சினைகள் இருக்கலாம். அதை எல்லாம் மறந்து போட்டி போட்டு செயல்பட வேண்டும். அந்த போட்டி ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும்.

எனவே அனைவரும் ஒற்றுமையாக செயல்பட்டால் தான் நாடாளுமன்ற தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்.


இவ்வாறு அவர் கூறினார். பின்னர் அமைச்சர் சு.முத்துசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

பேச்சுவார்த்தை

கோவை மாவட்டத்தில் அனைத்து பணிகளும் விரைவுபடுத்தப் படும். டாஸ்மாக் கடையில் கூடுதலாக பணம் வாங்குவது தற்போது தடுக்கப்பட்டு உள்ளது. ஓரிரு இடங்களில் தற்போது அந்த பிரச்சினை உள்ளது.


அதுவும் தடுக்கப்படும். டாஸ்மாக் தொழிலாளர்களுக்கு 10 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு பிரச்சினைகள் உள்ளன.


இது தொடர்பாக டாஸ்மாக்கில் உள்ள 17 தொழிற்சங்கங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளோம். அந்த பிரச்சினைகளை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.


சீர்குலைக்க முடியாது


அமைச்சர் செந்தில்பாலாஜி கைதை சட்டப்பூர்வமாக சந்திக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் தி.மு.க. வெற்றியை சீர்குலைக்க யாராலும் முடியாது. பருவமழை தொடர்பாக வால்பாறையில் முன்னேற்பாடு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.


இவ்வாறு அவர் கூறினார்.


கூட்டத்தில் முன்னாள் மத்திய மந்திரி மு.கண்ணப்பன், முன் னாள் அமைச்சர் பொங்கலூர் நா.பழனிசாமி, மேயர் கல்பனா, முன்னாள் எம்.பி., ஏ.பி.நாகராஜ், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் வி.சி.ஆறுக்குட்டி, பனப்பட்டி தினகரன், வக்கீல்கள் அருள்மொழி, கணேஷ்குமார், மாநகர துணை செயலாளர் கோட்டை அப்பாஸ், பகுதி செயலாளர்கள் சரத், கார்த்திக் செல்வராஜ், மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் ஆனந்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்