'நீட்' தேர்வை எதிர்கொள்ளும் வகையில் பாடத்திட்டங்களில் மாற்றங்களை கொண்டு வர வேண்டும்- அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

‘நீட்’ தேர்வை எதிர்கொள்ளும் வகையில் பாடத்திட்டங்களில் மாற்றங்களை கொண்டு வர வேண்டும் என பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறினார்.

Update: 2022-06-18 19:35 GMT

பாராட்டு விழா

அரியலூர் மாவட்டம் கீழக்குடியிருப்பு பகுதியில் ஜெயங்கொண்டம் பழுப்பு நிலக்கரி திட்டத்திற்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களை மீண்டும் நில உரிமையாளர்களிடம் ஒப்படைக்கும் வகையில் அரசாணை வெளியிடப்பட்டது. இதையடுத்து நிலத்தை மீட்பதற்காக பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்திய பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோருக்கு ஜெயங்கொண்டம் கீழக்குடியிருப்பு பகுதியில் பாராட்டு விழா மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பா.ம.க. மாவட்ட செயலாளர் காடுவெட்டி ரவி தலைமை தாங்கினார். சமூக நீதிப்பேரவை தலைவரும், பா.ம.க. வக்கீலுமான பாலு கூட்டத்தை தொடங்கி வைத்தார். இதில், பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

பா.ம.க. தலைமையில் ஆட்சி

ஜெயங்கொண்டம் பழுப்பு நிலக்கரி திட்டத்துக்கு நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு அரசின் உத்தரவிற்கு இணங்க நிலத்தை மீண்டும் விவசாயிகளிடம் விரைவில் வழங்க வேண்டும். அவர்களுக்கான அடிப்படை வசதிகள், கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக நிலம் வைத்திருந்ததற்கான இழப்பீடு ஆகியவற்றை வழங்க வேண்டும். 2026-ம் ஆண்டு தமிழகத்தில் பா.ம.க. தலைமையில் ஆட்சி அமையும். அதற்கான வியூகம் 2024-ல் எடுக்கப்படும்.

மத்திய அரசின் அக்னிபத் தேவையில்லாத திட்டமாகும். ராணுவத்தில் ஈடுபடுபவர்கள் முழு ஈடுபாட்டுடன் பணியாற்ற வேண்டும். 4 ஆண்டுகள்தான் வேலை என்பதால் ராணுவத்தில் முழுமையாக ஈடுபட மாட்டார்கள். எனவே இத்திட்டத்தை மத்திய அரசு வாபஸ் பெற வேண்டும்.

தமிழகத்தில் போலீஸ் நிலையங்களில் விசாரணை கைதிகள் உயிரிழப்பது தவிர்க்கப்பட வேண்டும். இவ்வகையான உயிரிழப்பிற்கு காரணமான போலீசார் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவது வரவேற்கத்தக்கது.

'நீட்' விலக்கு

'நீட்' தேர்விற்காக 60-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இது தவிர்க்கப்பட வேண்டும். 'நீட்' விலக்கு என்பது சாத்தியமான ஒன்றுதான். எனவே மத்திய அரசு தமிழகத்திற்கு குறைந்தது 5 ஆண்டுகளுக்காவது 'நீட்' தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். 'நீட்' தேர்வை எதிர்கொள்ளும் வகையில் பாடத்திட்டங்களில் மாற்றங்களை கொண்டு வர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எண்ணிக்கையில் வேண்டுமென்றால் அ.தி.மு.க. எதிர்க்கட்சியாக இருக்கலாம். ஆனால் மக்களுக்கான தேவையான டெல்டா பகுதி பாதுகாக்கப்பட்ட வேளாண்மை மண்டலமாக அறிவிக்க வேண்டும். ஆன்லைன் சூதாட்டத்தை தடுக்க அவசர சட்டம் கொண்டு வரவேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்காக தொடர்ந்து போராடி அதில் வெற்றி பெற்று வருவது பா.ம.க. தான். எனவே பா.ம.க. தான் எதிரி கட்சியாக இல்லாமல் உண்மையான எதிர்க்கட்சியாக செயல்படுகிறது.

சிமெண்டு ஆலைகள்

அரியலூரில் அதிக சிமெண்டு ஆலைகள் உள்ளதால் வாகனங்கள் அதிவேகமாகவும், ஒருவருக்கொருவர் போட்டி போட்டு செல்வதாலும் அதிக உயிரிழப்பு ஏற்பட்டு வருகிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். இதனை தவிர்க்கும் விதமாக மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு நடவடிக்கை ஏதும் எடுக்காத பட்சத்தில் இதற்காக பெரிய ஒரு போராட்டத்தை நடத்தவும் தயங்க மாட்டோம். இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் முன்னாள் மாநில துணை பொதுச்செயலாளர் டி.எம்.டி. திருமாவளவன், மாவட்ட தலைவர் சின்னதுரை, மாநிலத் துணை தலைவர் ராமதாஸ், மாநில இளைஞர் சங்க துணை செயலாளர் படைநிலை செந்தில், ஒன்றிய செயலாளர்கள் இனிது என்கிற இதயராஜா, கலியபெருமாள், தங்கராசு, நகர செயலாளர் பரசுராமன் உள்ளிட்ட பா.ம.க. நிர்வாகிகள், வன்னியர் சங்க நிர்வாகிகள், தொண்டர்கள், 13 கிராம பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

காடுவெட்டி குருவுக்கு அஞ்சலி

முன்னதாக ஜெயங்கொண்டம் அருகே உள்ள காடுவெட்டி கிராமத்தில் அமைந்துள்ள குரு மணிமண்டபத்தில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் காடுவெட்டி குருவின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்திவிட்டு ராமதாசின் வயதை குறிக்கும் வகையில் 82 அடி உயர கம்பத்தில் பா.ம.க. கொடியை ஏற்றி வைத்தார்.

Tags:    

மேலும் செய்திகள்