ஆன்லைன் சூதாட்ட தடை விவகாரத்தில் தமிழக அரசின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும் - அன்புமணி ராமதாஸ்

ஆன்லைன் சூதாட்ட தடை விவகாரத்தில் தமிழக அரசு தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

Update: 2022-06-06 08:44 GMT

பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையாவோரின் எண்ணிக்கையும், அதனால் நிகழும் தற்கொலைகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த விஷயத்தில் தமிழக அரசின் நிலைப்பாடு குறித்து அமைச்சர்கள் முன்னுக்குப் பின் முரணாக பேசி வருவது குழப்பத்தை அதிகரிக்கிறது.

சென்னையில் கடந்த மே 30-ந் தேதி செய்தியாளர்களிடம் பேசிய தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, ''தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய சட்டம் இயற்றப்படும்'' என்று கூறியிருந்தார். ஆனால், அமைச்சர் தங்கம் தென்னரசு அளித்த பதிலின் சூடு தணிவதற்கு முன்பாகவே, புதுக்கோட்டையில் கடந்த 4-ந் தேதி செய்தியாளர்களைச் சந்தித்த சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, ''ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளோம். அதில் நல்லத் தீர்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது'' என்று விளக்கம் அளித்துள்ளார்.

இவ்வாறு 2 அமைச்சர்கள் இருவேறு நிலைப்பாட்டை தெரிவிப்பது மக்கள் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போதைய சூழலில் திருத்தப்பட்ட ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டத்தை இயற்றுவது மட்டும் தான் ஆன்லைன் சூதாட்டம் என்ற அரக்கனிடம் இருந்து மக்களைக் காக்கும். மாறாக, சுப்ரீம் கோர்ட்டில் எப்போது விசாரிக்கப்படும் என்றே தெரியாத மேல்முறையீட்டை நம்பிக் கொண்டிருப்பது ஆன்லைன் சூதாட்ட அரக்கனின் அத்துமீறல்களை அனுமதிப்பதற்கு சமமானதாகும்.

எனவே, ஆன்லைன் சூதாட்டம் மற்றும் அதனால் நிகழும் தற்கொலைகளைத் தடுக்க புதிய தடை சட்டம், மேல்முறையீடு என்ற இரண்டில் எந்த ஆயுதத்தை தமிழக அரசு எடுக்கப் போகிறது என்பதை விளக்க வேண்டும். மேல்முறையீடு தான் தமிழக அரசின் விருப்பம் என்றால், அதன் பாதகங்களை உணர்ந்து, அதற்கு பதிலாக ஆன்லைன் சூதாட்டத் தடைக்கு அவசர சட்டம் பிறப்பிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்