மழை வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்தபின் உரிய நிதி கொடுப்பார்கள் என நம்புகிறோம் - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
வெள்ள மீட்பு பணியில் அரசியல் செய்ய வேண்டாம் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
நெல்லை,
நெல்லை மாவட்டத்தில் கடந்த 17, 18-ந்தேதிகளில் பெய்த அதீத கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இதையடுத்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கப்படும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த வாரம் அறிவித்தார்.
அதன்படி, இன்று நெல்லையில் மழை வெள்ளத்தால் உயிரிழந்த 11 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண தொகையை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். மேலும் கால்நடைகளை இழந்தவர்களுக்கும், முழுமையாக சேதமடைந்த குடிசை வீடுகளுக்கும் தலா ரூ.10 ஆயிரம் நிவாரண தொகையை வழங்கினார்.
அதன்பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது:-
100 வருடத்திற்கு பிறகு இதுபோன்ற மழை பெய்துள்ளது என்பதை மக்கள் புரிந்து கொள்வார்கள். அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், எம்.எல்.ஏ.க்கள், அரசு அதிகாரிகள் வெள்ள மீட்பு பணியில் களத்தில் இருந்து தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர். இதை அரசியல் செய்ய வேண்டாம். தென்மாவட்டங்களில் முதல்-அமைச்சர் அனைத்து நிவாரண பணிகளையும் செய்து கொண்டிருக்கிறார்.
தென்மாவட்டங்களில் மழை வெள்ள பாதிப்பு எப்படி இருக்கிறது என்பதை ஆய்வு செய்ய மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் தூத்துக்குடிக்கு வருகிறார். மழை வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்தபின் உரிய நிதி கொடுப்பார்கள் என நம்புகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.