மிக உயர்ந்த சோசலிச தலைவர்களில் ஒருவரை இழந்துவிட்டோம் - சரத் யாதவ் மறைவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
முன்னாள் மத்திய மந்திரி சரத் யாதவ் மறைவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.;
சென்னை,
முன்னாள் மத்திய மந்திரியும், ஐக்கிய ஜனாதாதள கட்சித் தலைவருமான சரத் யாதவ் தனது 75-வது வயதில் நேற்று (ஜனவரி 12ஆம் தேதி) இரவு காலமானார். இதனை அவரது மகள் சுபாஷினி சரத் யாதவ் டுவிட்டரில் உறுதிப்படுத்தினார். முன்னதாக முன்னாள் அமைச்சர் சரத் யாதவ் உடல்நிலை மோசமடைந்து குருகிராமில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
பீகாரில் ஆளும் ஐக்கிய ஜனதாதளத்தின் முன்னாள் தலைவரான சரத் யாதவ், மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அமைச்சரவையில் 1999-2004 மத்திய அமைச்சராக இருந்தார். 2017-ல் ராஜ்யசபாவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். நிதிஷ்குமாருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இதையடுத்து, கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ், தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
ஐக்கிய ஜனதா தளம் கட்சி மீது உரிமை கோரி தேர்தல் ஆணையத்தில் முறையிட்டார். இவரது கோரிக்கையை தேர்தல் ஆணையம் நிராகரித்தது. பின் லோக் தந்திரிக் ஜனதா தளம் கட்சியை துவக்கினார். இதனையடுத்து மார்ச் 2022-ல், சரத் யாதவ், முந்தைய ஜனதா தளத்தின் பல்வேறு கிளைகளை ஒன்றிணைக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, எல்ஜேடி கட்சியை ராஷ்ட்ரிய ஜனதா தளத்துடன் இணைப்பதாக அறிவித்தார்.
இந்த சூழலில் வயது முதுமை காரணமாக உடல்நலக்குறைவால் அரியானாவில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று இரவு காலமானார். சரத் யாதவ் மறைவுக்கு பல்வேறு கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் சரத் யாதவ் மறைவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், "ஆர்.ஜே.டி தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான சரத் யாதவ் மறைவு ஆழ்ந்த வருத்தத்தை அளிக்கிறது.
தனது கடைசி மூச்சு வரை ஜனநாயகம் மற்றும் மதச்சார்பின்மை என்ற இலட்சியங்களுக்கு ஆழ்ந்த அர்ப்பணிப்புடன் இருந்த மிக உயர்ந்த சோசலிச தலைவர்களில் ஒருவரை நாம் இழந்துவிட்டோம். எனது இதயப்பூர்வமான இரங்கல்கள்" என்று தெரிவித்துள்ளார்.