ஒரு நல்லவரை நாம் இழந்து இருக்கிறோம்: விஜயகாந்த் மறைவிற்கு தமிழிசை சவுந்தரராஜன் இரங்கல்

விஜயகாந்த் மறைவிற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Update: 2023-12-28 04:02 GMT

சென்னை,

நடிகரும், தே.மு.தி.க தலைவருமான விஜயகாந்த் கடந்த 26-ம் தேதி இரவு மீண்டும் மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று தேமுதிக தலைமை அலுவலகம் தெரிவித்து இருந்த நிலையில், அவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக தேமுதிக தலைமை அலுவலகம் இன்று தெரிவித்தது. மேலும் மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதால் வெண்டிலேட்டர் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என தே.மு.தி.க. தலைமை அலுவலகம் தெரிவித்து இருந்தது.

இந்த நிலையில், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த், சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். அவருக்கு வயது (71). விஜயகாந்த் மறைவிற்கு அரசியல் கட்சித் தலைவர்கள், திரை பிரபலங்கள், கட்சித் தொண்டர்கள், பொதுமக்கள் என பலர் கண்ணீர் மல்க இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில், தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவிற்கு புதுச்சேரி மாநில துணை நிலை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,

"உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தேமுதிக தலைவர், சகோதரர் கேப்டன் விஜயகாந்த் உயிரிழந்த செய்தியறிந்து மிகவும் மனவேதனை அடைந்தேன். நல்ல திரைப்படக்கலைஞர்.... நல்ல அரசியல் தலைவர்.... நல்ல மனிதர்.... நல்ல சகோதரர்.... ஒட்டுமொத்தமாக ஒரு நல்லவரை நாம் இழந்து இருக்கிறோம்.

சகோதரர் விஜயகாந்த் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், தொண்டர்களுக்கும், நண்பர்களுக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும்,ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு அன்னாரின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றேன்". இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்