'5 ஆண்டுகளில் செய்ய வேண்டிய திட்டப்பணிகளை ஓராண்டில் செய்திருக்கிறோம்' முதல்-அமைச்சர் பெருமிதம்
5 ஆண்டுகளில் செய்ய வேண்டிய திட்டப்பணிகளை ஓராண்டில் செய்திருக்கிறோம் என்றும், இதே வேகத்துடன் தொடர்ந்து செயல்படுவோம் என்றும் சிவகங்கையில் நடந்த விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
சிவகங்கை,
அனைத்து மக்களும் சாதி, மத பேதமின்றி சமமாக வாழ்ந்திட தந்தை பெரியார் பெயரில் கருணாநிதியால் உருவாக்கப்பட்டது பெரியார் நினைவு சமத்துவபுரம் திட்டமாகும்.
சிவகங்கை மாவட்டத்தில் 9 சமத்துவபுரங்கள் கட்டப்பட்டு 8 சமத்துவபுரங்கள் பொதுமக்களின் பயன்பாட்டில் உள்ளது.
9-வது சமத்துவபுரமாக 2010-2011-ம் நிதியாண்டில் கோட்டை வேங்கைப்பட்டி கிராமத்தில் சமத்துவபுரம் கட்டப்பட்டு திறக்கும் நிலையில் ஆட்சி மாற்றத்தால் திறக்கப்படாமல் இருந்தது.
கலைஞர் சிறுவர் பூங்கா
இந்த சமத்துவபுரம் கோட்டை வேங்கைப்பட்டி கிராமத்தில் 12.25 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது. இங்கு 100 வீடுகள், தலா ரூ.1.92 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளது.
இங்கு தனிநபர் வீட்டு குடிநீர் இணைப்பிற்காக ரூ.15.87 லட்சம் மதிப்பீட்டில் 100 வீடுகளுக்கு குடிநீர் இணைப்பும், குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மற்றும் இதர குடிநீர் திட்டப்பணிகள் ரூ.2.92 லட்சம் மதிப்பீட்டிலும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அண்ணா விளையாட்டுத்திடல் ரூ.1 லட்சம் மதிப்பீட்டில் கைப்பந்து, கபடி மைதானம் உள்பட அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளுடனும், சிறுவர், சிறுமியர் விளையாடும் வகையில் கலைஞா் சிறுவர் பூங்கா ரூ.5.25 லட்சம் மதிப்பீட்டிலும் அமைக்கப்பட்டுள்ளது.
சாவிகள் வழங்கப்பட்டன
மேலும், தெருக்களில் ரூ.4.80 லட்சம் மதிப்பீட்டில் மின்விளக்குகள், ரூ.96.39 லட்சம் மதிப்பீட்டில் அனைத்து தெருக்களிலும் மழைநீர் வடிகால் வசதிகள், ரூ.54.29 லட்சம் மதிப்பீட்டில் தார் சாலைகளும் அமைக்கப்பட்டுள்ளது.
ரூ.3 கோடியே 17 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள இந்த புதிய சமத்துவபுரத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்து பயனாளிகளுக்கு வீடுகளுக்கான சாவிகளை வழங்கி அவர்களுடன் உரையாடினார்.
மேலும், சமத்துவபுரத்தின் முகப்பில் ரூ.2.25 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள பெரியார் சிலை மற்றும் சமத்துவபுர வளாகத்தில் ரூ.4.38 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள நியாய விலைக்கடை கட்டிடம், ரூ.8.09 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மைய கட்டிடம் மற்றும் நூலக கட்டிடம் ஆகியவற்றையும் முதல்-அமைச்சர் திறந்து வைத்தார்.
பெரியார் நினைவு சமத்துவபுரத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தன்பின்பு காரையூரில் நடைபெற்ற அரசு விழாவில் புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற பணிகளை திறந்து வைத்தார்.
விழாவில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
1997-ம் ஆண்டு தந்தை பெரியார் பெயரில் சமத்துவபுரத்தினை ஏற்படுத்தி தமிழகம் முழுவதும் சமத்துவபுரங்களை கட்டி, சமூக நல்லிணக்கத்திற்கு ஒரு புதிய ஒளியை கருணாநிதி காட்டினார். சிவகங்கை மாவட்டத்தில் மட்டும் 9 சமத்துவபுரங்கள் கட்டப்பட்டது. அதில், 8 சமத்துவபுரங்கள் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு தி.மு.க. ஆட்சியில் இருந்த போது திறக்கப்பட்டது. கோட்டை வேங்கைப்பட்டி சமத்துவபுரமும் முன்கூட்டியே திறக்கப்பட்டிருக்க வேண்டும்.
127 பணிகளுக்கு அடிக்கல்
2011-ம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்டதன் காரணமாக பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படவில்லை.
இதன்மூலம் மக்களுக்கான திட்டங்களை அ.தி.மு.க. அரசு எப்படியெல்லாம் பாழ்படுத்தியது என்பதை நீங்கள் அறிந்து கொள்ளலாம். அ.தி.மு.க. ஆட்சி மக்களுக்கான ஆட்சியாக இல்லாமல், அரசியல் உள்நோக்கம் கொண்ட ஆட்சியாக இருந்த காரணத்தால்தான் இப்படியெல்லாம் நடந்து கொண்டார்கள்.
இந்த விழாவில் 119 கோடியே 68 லட்சம் ரூபாய் மதிப்பில் 127 பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. மொத்தம் 24 கோடியே 77 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், 44 பணிகள் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக அர்ப்பணிக்கப்பட்டு இருக்கிறது.
மொத்தம் 59 ஆயிரத்து 162 பயனாளிகளுக்கு 136 கோடியே 45 லட்சம் ரூபாய் மதிப்பில் அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.
சீல்டுகால் கால்வாய் புனரமைப்பு
சிவகங்கை தாலுகாவில் இருக்கும் பல கிராமங்கள் பயன்பெறும் வகையில், சீல்டுகால் கால்வாயை புனரமைக்கும் பணிகள் 22 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும். இதனால் மேலப்பூங்குடி, சாலூர், சோழபுரம் மற்றும் நாலுகோட்டை கிராமங்களில் உள்ள கண்மாய்கள் நிறைந்து 1,800 ஏக்கர் வேளாண் நிலங்கள் பயன்பெறும்.
சிவகங்கை அரசு மருத்துவ கல்லூரியில் மகப்பேறு மற்றும் குழந்தைகள் பராமரிப்பு பிரிவிற்கு 12 கோடி ரூபாய் செலவில் 100 படுக்கைகள் கொண்ட புதிய கூடுதல் கட்டிடம் அமைக்கப்படும்.
அரசு செலவு செய்யும் ஒவ்வொரு பைசாவும், கடைக்கோடியில் இருக்கக்கூடிய குடிமகனுக்கும் சென்று சேர வேண்டும் என்பது தான் இந்த அரசின் நோக்கம்.
மிகப்பெரிய பாராட்டு
சட்டமன்ற தேர்தலின் போது இருந்ததைவிட, இப்போது அதிகளவு எழுச்சி மக்களிடத்தில் ஏற்பட்டிருக்கிறது. மக்களுக்கு மிகமிக உண்மையாக இருப்பது, மக்களுக்கு நேர்மையான ஆட்சியை வழங்குவது தான் இதற்கு முக்கியக் காரணம்.
தேர்தலுக்கு முன்னால், எப்படி மக்களை சந்தித்து வந்தேனோ, அதைவிட அதிகமாக இப்போது மக்களை சந்தித்து கொண்டிருக்கிறேன். மக்களைத் தொடர்ச்சியாக சந்திப்பது, ஆட்சியாளர்களின் மிக முக்கியமான இலக்கணமாக நான் கருதுகிறேன்.
சமீபத்தில் கருணாநிதி சிலையை திறந்து வைத்த துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, கருணாநிதி எப்படி சிறப்பாக ஆட்சி நடத்தினார்கள் என்பதை பெருமையுடன் பேசினார். அதோடு மட்டுமல்லாமல் கருணாநிதி வழியில் இப்போதைய முதல்-அமைச்சரும் ஆட்சி நடத்தி வருகிறார் என்று குறிப்பிட்டார். இதை எனது வாழ்நாளில் கிடைத்த மிகப்பெரிய பாராட்டாக கருதுகிறேன்.
வேகத்துடன் செயல்படுவோம்
கருணாநிதி இருந்த இடத்தை நான் நிரப்பிவிட்டேன் என்று சொல்லவில்லை. அவரது இடத்தை யாராலும் நிரப்பிட முடியாது. அவரை போன்று செயல்பட முடியும் என்பதை நிரூபிக்கும் வகையில், கடந்த ஓராண்டு காலமாக எனது செயல்பாடு அமைந்துள்ளது.
தமிழ் சமுதாயத்துக்கு என்னால் முடிந்தவரை உழைத்துவிட்டேன், எனக்கு பிறகு யார் என்று கேட்டால் தம்பி ஸ்டாலின்தான் என்று கருணாநிதி ஒரு முறை சொன்னார். அந்த நம்பிக்கையை இந்த ஓராண்டு காலத்தில் நான் காப்பாற்றி இருக்கிறேன். தொடர்ந்து காப்பாற்றுவேன். அதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை.
5 ஆண்டுகளில் செய்ய வேண்டியதை இந்த ஓராண்டு காலத்தில் செய்திருக்கிறோம். இது ஏதோ ஆரம்ப கட்ட வேகம் என்று நீங்கள் நினைக்கலாம். எல்லோரும் இப்படித்தான் இருப்பார்கள் என்று நினைக்க வேண்டாம். எப்போதும் இதே சுறுசுறுப்புடனும், இதே வேகத்துடனும் தான் நான் இருப்பேன்.
பெண் போலீஸ் பயிற்சி கல்லூரி
தமிழினம் எத்தனை ஆயிரம் ஆண்டுகள் பழமையானது என்பதற்கு எடுத்துக்காட்டாக, தமிழர்களின் தாய்மடியாக விளங்கும் கீழடி இருக்கக்கூடிய மாவட்டம்தான் சிவகங்கை மாவட்டம்.
கீழடியின் தொன்மையையும், அதன் மூலமாக தமிழினத்தின் கடந்த கால பெருமையையும் மீட்ட அரசு தான் தி.மு.க. அரசு.
சிவகங்கையை தலைமையிடமாக கொண்டு வீரமங்கை வேலு நாச்சியார் பெயரில் பெண் போலீஸ் பயிற்சி கல்லூரியை தொடங்க வேண்டும் என்று கார்த்தி சிதம்பரம் எம்.பி. கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அதிகாரிகளுடன் கலந்து பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,
இவ்வாறு அவர் பேசினார்.
அமைச்சர்கள்
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கே.என்.நேரு, கே.கே.எஸ்.எஸ்.ஆா்.ராமச்சந்திரன், கேஆர்.பெரியகருப்பன், ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன், பி.மூர்த்தி மற்றும் கார்த்தி சிதம்பரம் எம்.பி., ஊரக வளர்ச்சித்துறை முதன்மை செயலாளர் அமுதா, சிவகங்கை கலெக்டர் மதுசூதன் ரெட்டி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.