மோசமான ரேஷன் அரிசியை வாங்கிதான் கீழே கொட்டுகிறோம்

மோசமான ரேஷன் அரிசியை வாங்கி தான் கீழே கொட்டுகிறோம் என கிராமசபை கூட்டத்தில் எம்.எல்.ஏ.விடம் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.

Update: 2022-11-01 18:45 GMT

மோசமான ரேஷன் அரிசியை வாங்கி தான் கீழே கொட்டுகிறோம் என கிராமசபை கூட்டத்தில் எம்.எல்.ஏ.விடம் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.

கிராம சபை கூட்டம்

ராமநாதபுரம் நகராட்சிக்குட்பட்ட 33 வார்டுகளிலும் தமிழக அரசின் உத்தரவின்படி கிராமசபை கூட்டம் நேற்று நடைபெற்றது. ராமநாதபுரம் நகரின் 30-வது வார்டில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்திற்கு அப்பகுதி கவுன்சிலரும் நகராட்சி தலைவருமான கார்மேகம் தலைமை தாங்கினார். நகரசபை அதிகாரிகள் முன்னிலை வகித்தனர்.

இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட பொதுமக்கள் குடிநீர் குழாய், தெரு விளக்கு, கண்காணிப்பு கேமரா, பாதாள சாக்கடை பிரச்சினை, ரேஷன் பொருட்கள், குப்பைகள் குறித்து கோரிக்கை வைத்தனர். வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களை பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று கோரினர்.

குடிநீர் திட்டம்

இந்த கோரிக்கைகளுக்கு பதிலளித்து நகராட்சி தலைவர் கார்மேகம் பேசியதாவது:-

பாதாள சாக்கடை திட்டம் மறு சீரமைப்பு செய்து நிறைவேற்றப்பட உள்ளது. காவிரி குடிநீர் திட்டம் ரூ.584 கோடியில் தனி திட்டமாக நிறைவேற்ற உள்ளோம். இதுதவிர பொட்டிதட்டி குடிநீர் திட்டமும் மீண்டும் நிறைவேற்றப்பட்டு வருகிறது. அனைத்து வார்டுகளிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட உள்ளது. முதல்கட்டமாக 29 மற்றும் 30-வது வார்டுகளில் பொருத்தப்பட உள்ளது. ரேஷன் பொருட்கள் முறையாக கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதனை தொடர்ந்து நகராட்சியின் 13-வது வார்டான கள்ளர்தெரு பகுதியில் கிராம சபை கூட்டம் சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் தலைமையில் நடைபெற்றது. நகராட்சி தலைவர் கார்மேகம், துணை தலைவர் பிரவீன்தங்கம், பொறியாளர் சுரேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் கவுன்சிலர் வீரசேகர் வரவேற்று பேசினார்.

குப்பையில் கொட்டுகிறோம்

இந்த கூட்டத்தில் கலந்துகொண்ட பொதுமக்கள் பேசியதாவது:-

எங்கள் பகுதியில் குப்பைகள் முறையாக அள்ளுவதில்லை. ரேஷன்கடையில் வழங்கப்படும் அரிசி பயன்படுத்த முடியவில்லை. வாங்கி கீழே கொட்டும் அளவிற்கு மோசமாக உள்ளது. ரேஷன் கடையில் ரூ.30 மதிப்பிலான இதர பொருட்களை வாங்கினால்தான் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்கிறது. அதுவும் எடைகுறைவாகவே வழங்குகின்றனர். சமையல் எண்ணெய் மாதந்தோறும் வழங்குவதில்லை. . இவ்வாறு அவர்கள் கூறினர். இதற்கு பதிலளித்து காதர்பாட்சா முத்துராமலிங்கம் பேசியதாவது:- எனது சொந்த நிதியில் இருந்து அங்கன்வாடி மையத்திற்கு மேற்கூரை அமைத்துதருகிறேன். எடை மிஷின் வாங்கி தருகிறேன். மழைநீர் தேங்காமல் வழிவகை செய்யப்படும். ரேஷன்கடையில் உடனடியாக அதிகாரிகள் ஆய்வு செய்து தரமான பொருட்கள் வழங்க நடவடிக்கை எடுப்பார்கள் என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்