'நாங்கள் அ.தி.மு.க. கொடியை பயன்படுத்துவது தவறில்லை'ஈரோட்டில் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் பேட்டி

‘நாங்கள் அ.தி.மு.க. கொடியை பயன்படுத்துவது தவறில்லை’ என்று ஈரோட்டில் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் பேட்டி அளித்தாா்

Update: 2023-05-20 22:18 GMT

நாங்கள் அ.தி.மு.க. கொடியை பயன்படுத்துவது தவறில்லை என்று ஈரோட்டில் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் கூறினார்.

ஆலோசனை கூட்டம்

ஈரோட்டில் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் அணியின் மாவட்ட செயல்வீரர்கள், வீராங்கனைகள் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் தலைமை தாங்கி பேசினார். அதைத்தொடர்ந்து அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-

கொங்கு மண்டலத்தில் எங்களது அணியின் சார்பில் மாநாடு நடத்த திட்டமிட்டுள்ளோம். இதற்காக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளை சந்தித்து மாநாட்டிற்கு பொதுமக்களை அழைத்து வர வேண்டும் என அறிவுறுத்தியுள்ளோம். கட்சியின் சட்ட விதிகளின்படி ஓ.பன்னீர்செல்வம் தான் அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளர். கோர்ட்டில் வழக்கு உள்ளது. தேர்தல் ஆணையம் கூறியதை யாரும் நம்ப வேண்டாம். அ.தி.மு.க. கொடியை பயன்படுத்த வேண்டாம் என கோர்ட்டும், தேர்தல் ஆணையமும் சொல்லவில்லை. அ.தி.மு.க.வில் பிரிந்திருக்கிற அனைத்து சக்திகளும் ஒன்றாக வேண்டும் என்பது தான் எங்களது நோக்கம். அப்படி ஒன்றுபட்டால் தான் வருகிற நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தல்களில் வெற்றி பெற முடியும். இதில் வேண்டியவர்கள், வேண்டாதவர்கள் என யாரும் இல்லை.

அ.தி.மு.க. கொடி

டி.டி.வி.தினகரன், சசிகலா, சைதை துரைசாமி, அன்வர் ராஜா, ஏ.சி.சண்முகம் என யாராக இருந்தாலும், பிரிந்தவர்கள் ஒன்று சேர வேண்டும். எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க. நன்றாக இருக்க வேண்டும் என நினைக்கவில்லை. தான் நன்றாக இருக்க வேண்டும், கட்சியை தன்னுடைய சொத்தாக்கி விட வேண்டும் என நினைக்கிறார். அ.தி.மு.க. சார்பில் எடப்பாடி பழனிசாமி அறிவித்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்துக்கு நிறையபேர் போகவில்லை. தற்போது எடப்பாடி பழனிசாமி அணியை சேர்ந்தவர்கள் எங்களிடம் பேசி வருகின்றனர். நிச்சயமாக நல்ல தீர்வை எட்டுவோம்.

சேலம் மாவட்டத்தில் நடந்த சாலை மறியல் போராட்டம் என்பது, ஜனநாயக நாட்டில் யார் வேண்டும் என்றாலும் கூட்டம் நடத்தலாம், கொடியை பயன்படுத்தலாம். ஆனால், அவர்களை கொடியை பயன்படுத்த வேண்டாம் என சொல்வது சர்வாதிகாரம். ஜனநாயகத்திற்கு விரோதமானது. அ.தி.மு.க. கொடியை பயன்படுத்தக்கூடாது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், டி.ஜி.பி.யிடம் புகார் அளித்துள்ளார். நாங்கள் கொடியை பயன்படுத்தாமல் இருக்க முடியாது. அ.தி.மு.க. கொடியை பயன்படுத்துவது தவறில்லை என நாங்கள் கூறுகிறோம்.

இவ்வாறு வைத்திலிங்கம் கூறினார்.

கூட்டத்தில் நிர்வாகிகள் மனோஜ்பாண்டியன், புகழேந்தி, மருது அழகுராஜ், பிரபாகர், மாவட்ட செயலாளர் தங்கராஜு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்