கோடை வெப்பத்தில் இருந்து பாதுகாக்கும் வழிமுறைகள்

கோடை வெப்பத்தில் இருந்து மக்கள் தங்களை பாதுகாத்து கொள்ளும் வழிமுறைகள் பற்றி கலெக்டர் விசாகன் கூறியிருக்கிறார்.

Update: 2023-04-27 16:18 GMT

கோடைகால வெப்பம்

திண்டுக்கல் மாவட்டத்தில் கோடைகாலத்தின் தொடக்கத்தில் இருந்தே வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. கோடை வெப்பம் அதிகமாக இருப்பதால், அவ்வப்போது அனல் காற்று வீசுகிறது. எனவே பொதுமக்கள் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள், தற்காப்பு வழிமுறைகள் குறித்து கலெக்டர் விசாகன் கூறியிருப்பதாவது:-

கோடை வெப்பம், வெப்ப அலை பாதிப்புகளை தடுக்க மக்கள் வீட்டில் தயாரித்த மோர், லஸ்ஸி, பழைய சோறுநீர், எலுமிச்சைச்சாறு ஆகியவற்றை பருகி நீரிழப்பை தவிர்க்கலாம். மேலும் வெளிர்நிறமும், காற்றோட்டமும் உள்ள பருத்தி ஆடைகளை அணிய வேண்டும்.

வெளியில் செல்லும் போது, கண்ணாடி மற்றும் காலணி அணிந்து, குடை வைத்துகொள்ள வேண்டும். தாகம் எடுக்காவிட்டாலும் கூட போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். வானொலி, தொலைக்சாட்சி, செய்தித்தாள் மூலமாக உள்ளூர் வானிலையை தெரிந்து கொள்ள வேண்டும்.

குழந்தை-முதியவர்கள்

குழந்தைகளை கார்களில் தனியே அமர்த்திவிட்டு வெளியே செல்ல கூடாது. வாகனங்களில் வெப்பம் அதிகமாகி, குழந்தைகளின் உயிருக்கு ஆபத்தாகி விடும். குழந்தைகளுக்கு இளநீர் போன்றவற்றை குடிக்க கொடுக்க வேண்டும். குழந்தைகளுக்கு ஏற்படும் வெப்பம் தொடர்பான நோய்களை கண்டறியும் வழிமுறைகளை தெரிந்து கொள்ள வேண்டும். குழந்தைகளின் சிறுநீரை சோதித்துப் பார்க்க வேண்டும். மஞ்சள் நிறமாக சிறுநீர் வெளியேறினால், நீரிழப்பு என அறியலாம்.

இதேபோல் தனியாக வசிக்கும் முதியவர்களின் உடல் நிலையை தினமும் இருமுறை சரிபார்த்து கொள்ள வேண்டும். முதியவர்களின் அருகாமையில் தொலைபேசி உள்ளதா? என உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். வெப்ப அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு இருப்பதாக தோன்றினால், அவர்களின் வெப்பத்தை தணிக்க ஈரமான துண்டுகளை கழுத்து, கைகளில் வைக்க வேண்டும். குளிர்ந்த நீரில் குளிக்க வைக்க வேண்டும். போதிய இடைவேளைகளில் நீர் அருந்துவதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

கால்நடைகள்

மேலும் கால்நடைகளை நிழல் தரும் கூரைக்கு அடியில் கட்டி வைப்பதோடு, தேவையான அளவு தண்ணீர் கொடுக்க வேண்டும். கால்நடைகளுக்கு வெட்டவெளியில் தீவனங்களை போடக்கூடாது. பறவைகளுக்கு நிழற்கூரைகள் அமைத்துக் கொடுத்து போதுமான நீர் கொடுக்க வேண்டும். செல்லப்பிராணிகளை வாகனங்களில் தனியே விட்டு செல்ல வேண்டாம். அனல் காற்று வீசும் காலங்களில் பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும்.

இவ்வாறு கலெக்டர் விசாகன் கூறியிருக்கிறார்.

Tags:    

மேலும் செய்திகள்