குழாயில் ஏற்பட்ட உடைப்பால் வீணாகும் குடிநீர்

குழாயில் ஏற்பட்ட உடைப்பால் குடிநீர் வீணாகிறது.

Update: 2023-04-27 19:49 GMT

தா.பழூர்:

வீணாகும் குடிநீர்

அரியலூர் மாவட்டம், தா.பழூர் பகுதியில் இருந்து ஜெயங்கொண்டம், ஆண்டிமடம், பெரம்பலூர், அரியலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தா.பழூர் சுத்தமல்லி பிரிவு சாலையில் உள்ள வேகத்தடைக்கு அருகில் சாலையின் மையப்பகுதியில் கூட்டுக்குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டு ஊற்று போல் தண்ணீர் கொப்பளித்து வெளியேறுகிறது.

இதனால் அதிக அளவிலான தண்ணீர் யாருக்கும் பயனில்லாமல் வீணாகிறது. தொடர்ந்து குழாயில் இருந்து தண்ணீர் வெளியேறுவதால் சாலை சிறிது சிறிதாக சேதம் அடைந்து வருகிறது. இந்த சாலையில் கனரக வாகனங்கள் மூலம் நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து அரியலூர் பகுதியில் உள்ள சிமெண்டு ஆலைகளுக்கு நிலக்கரி ஏற்றிச் செல்லப்படுகிறது.

சேதமடைந்த சாலை

சுமார் ஒரு மாத காலமாக இந்த உடைப்பு உரிய அதிகாரிகளால் கண்டுகொள்ளப்படாமல் அப்படியே விடப்பட்டுள்ளதால், சேதமடைந்துள்ள சாலையில் கனரக வாகனங்கள் சிக்கிக் கொள்ளும் வாய்ப்பு உள்ளது. இதன் மூலம் அரியலூர், தா.பழூர் வழியாக ஜெயங்கொண்டம், கும்பகோணம் செல்லும் மார்க்கத்தில் போக்குவரத்து பாதிப்பு ஏற்படும். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக சேதமடைந்துள்ள கூட்டுக்குடிநீர் திட்ட குழாயை சரி செய்வதுடன், சாலையை சீரமைத்து தர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்