தாராசுரம் காய்கறி மார்க்கெட்டில் காட்சி பொருளான குடிநீர் தொட்டி

கும்பகோணம் தாராசுரம் காய்கறி மார்க்கெட்டில் காட்சி பொருளாக உள்ள குடிநீர் தொட்டி சீரமைக்கவும், பூட்டி கிடக்கும் கழிவறை கட்டிடத்தை திறக்கவும் நடவடிக்கை வேண்டும் என்று மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2023-06-06 20:44 GMT

கும்பகோணம்;

கும்பகோணம் தாராசுரம் காய்கறி மார்க்கெட்டில் காட்சி பொருளாக உள்ள குடிநீர் தொட்டி சீரமைக்கவும், பூட்டி கிடக்கும் கழிவறை கட்டிடத்தை திறக்கவும் நடவடிக்கை வேண்டும் என்று மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

தாராசுரம் காய்கறி மார்க்கெட்

தமிழகத்திலேயே 3-வது பெரிய மார்க்கெட்டாக கும்பகோணம் தாராசுரம் காய்கறி மார்க்கெட் விளங்குகிறது. இந்த மார்க்கெட்டில் 450 பெரிய கடைகளும், 500-க்கும் மேற்பட்ட சிறிய கடைகளும் உள்ளன. இந்த மார்க்கெட்டை வாழ்வாதாரமாக கொண்டு 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.இந்தியாவின் பல்வேறு பகுதியில் இருந்து தினமும் சுமார் 300 டன் காய்கறி மற்றும் பழங்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன.

குடிநீர் வசதி

குறிப்பாக கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து அதிகளவில் வியாபாரிகள் காய்கறிகளை லாரிகளில் கொண்டு வருகின்றன. அவர்களுடன் ஏராளமான வெளியூர் வியாபாரிகளும் மார்க்கெட்டுக்கு வந்து செல்கின்றனர்.இதனால் மார்க்கெட்டுக்கு வரும் வியாபாரிகள், டிரைவர்கள், பொதுமக்கள் நலன் கருதி தாராசுரம் காய்கறி மார்க்கெட் வளாகத்துக்குள் குடிநீர் வசதி, கழிவறை வசதி செய்து கொடுக்கப்பட்டது.

சீரமைக்க வேண்டும்

சிறிது காலம் முறையாக பராமரிக்கப்பட்டு வந்த கழிவறை கட்டிடம் மற்றும் குடிநீர் தொட்டி நாளடைவில் பராமரிப்பின்றி விடப்பட்டது. இதனால் குடிநீர் தொட்டி தண்ணீர் இன்றி காட்சி பொருளாக இருக்கிறது. மேலும், கழிவறை கட்டிடமும் பூட்டியே கிடக்கிறது.இதன்காணமாக மார்க்கெட்டுக்கு வருபவர்கள் குடிநீர், கழிப்பறை வசதி இன்றி அவதிக்குள்ளாகி வருகின்றனர்.எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தாராசுரம் மார்க்கெட்டில் காட்சி பொருளாக உள்ள குடிநீர் தொட்டியை சீரமைக்கவும், கழிவறை கட்டிடத்தை திறந்து பயன்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.

Tags:    

மேலும் செய்திகள்